6 ஓட்டங்கள் கொடுத்தது தவறு தான் – தர்மசேனா!

Tuesday, July 23rd, 2019

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துவீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ஓட்டங்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்றும் கூறி உள்ளார்.

உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் அந்த ஓவரின் 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்கள் ஓட முயற்சிக்கும் போது, கப்தில் களத்தடுப்பு செய்து விக்கெட் காப்பாளருக்கு பந்தை எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்த போது அவரின் மட்டையில் பந்து பட்டு ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ஓட்டங்கள் கிடைத்தன. இதனால் ஆட்டம் சமநிலை ஆனது.

இந்த ஓவர் த்ரோ தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2-வது ஓட்டங்களை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ஓட்டங்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6 ஓட்டங்கள் வழங்கி நடுவர் தர்மசேனா தீர்ப்பு வழங்கினார். இதனால் தான், கடைசியில் போட்டி சமநிலையில் முடியும் நிலை ஏற்பட்டது என விமர்சிக்கப்பட்டது.

இப்படியான சூழலில், “தொலைக்காட்சியில் ரீப்ளேவை பார்த்த போது, என்னுடைய தீர்ப்பு தவறானது என்பதை அறிந்து கொண்டேன். ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணி செய்யும் போது, என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது. களத்தில் நான் கொடுத்த முடிவுக்காக, வருத்தப்படப் போவதில்லை” என்று கூறி உள்ளார்.

மேலும் அவர், “நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதை மற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர். அப்போது அவர்கள் டிவி ரீப்ளேவை பார்க்க முடியவில்லை; அவர்கள் அனைவரும் துடுப்பாட்ட வீரர்கள் 2 ஓட்டங்களை முழுமையாக ஓடிவிட்டார்கள் என்றுதான் முடிவு செய்திருந்தனர். அந்த வகையில் நானும் என்னுடைய முடிவை வெளிப்படுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்பு பிபிசிக்கு நேர்காணல் அளித்திருந்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆஷ்லெ கேல்ஸ் இந்த விவாதம் தமக்கு திகைப்பூட்டுவதாக கூறி இருந்தார்.

ஒரு ஓட்டம் கூடுதலாக கிடைத்ததால் தான் வெற்றிபெற முடிந்ததா என்ற கேள்விக்கு பிபிசியிடம் அவர், “நிச்சயமாக இல்லை. அந்த கடைசி பந்தில் இரண்டு ஓட்டங்களுக்கும் அதிகமாக தேவைப்பட்டிருந்தால், ஃபுல்டாஸ் பந்தை தூக்கி அடித்திருப்பார். அது மைதானத்திற்கு வெளியே கூட சென்றிருக்கலாம்” என்றார்.

Related posts: