10 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்தி பிளே-ஒப் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்த ஹைதராபாத்!

Wednesday, November 4th, 2020

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 10 விக்கெட்டுகளினால் மும்பையை வீழ்த்தி பிளே-ஒப் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தது.
ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்று வரும் 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய 56வது போட்டியில ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணித் தலைவர் டேவிட் வோர்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடியது.
மும்பை அணி பிளே-ஒப் சுற்றை முன்னதாகவே எட்டியதல் ஹர்திக் பாண்டியா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக விளையாடாமல் இருந்த ரோகித் சர்மா, இப்போட்டியில் களம் இறங்கினார்.
எந்த நெருக்கடியும் இன்றி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை சேர்த்தது.
இதையடுத்து, 150 ஓட்டத்தால் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடியது.
ஐதராபாத் அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய டேவிட் வோர்னர்-விருத்திமான் சஹா ஜோடி இறுதி வரை நிலைத்து நின்று ஆடி, மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
டேவிட் வோர்னர் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58 பந்துகளில் 85 ஓட்டங்களையும், மறுமுனையில் விருத்திமான் சஹா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 பந்துகளில், 58 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
இறுதியாக 17.1 ஓவர்களில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 151 ஓட்டங்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறி தனது பிளே – ஒப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

Related posts: