ஸ்ரீசாந்த் கோரிக்கைக்கு பிசிசிஐ மறுப்பு!

Wednesday, April 19th, 2017

சூதாட்ட விவகாரத்தில் தன் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை தளர்த்துமாறு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் முன்வைத்த கோரிக்கையை, பிசிசிஐ ஏற்க மறுத்துவிட்டது.

2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களாக இருந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதுதொடர்பான விசாரணையின் இறுதியில் அவர்கள் இருவருக்கும் வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், தன் மீதான வாழ்நாள் தடையை நீக்கக் கோரி பிசிசிஐ நிர்வாகக் குழுவிடம் ஸ்ரீசாந்த் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், பிசிசிஐ அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இதுகுறித்து, பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:

வாழ்நாள் தடையை நீக்கக் கோரி ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மறுஆய்வு மனு நிராகரிக்கப்பட்டது. அதுதொடர்பான, பிசிசிஐ தலைவர் ராகுல் ஜோரியின் கடிதம் ஸ்ரீசாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவர் மீதான வாழ்நாள் தடை தொடரும் என்றும், எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் அவர் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரள மாநில நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு எங்களது வழக்குரைஞர் சட்டரீதியாக பதிலளிப்பார் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

இங்கிலாந்தில் நடைபெறும் கிளப் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீசாந்த் பங்கேற்க முனைந்து வந்த நிலையில், இந்த முடிவின் மூலம் அந்த விவகாரத்துக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது

Related posts: