ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் நிறைவு !

Tuesday, September 15th, 2020

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது.

ஐபிஎல் ஆட்டங்களில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பிசிசிஐ, ஸ்ரீசாந்த் மற்றும் அவரது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சக வீரர்கள் அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருக்கு ஆயுள் தடை விதித்தது. இதை எதிர்த்து கேரள மற்றும் உச்சநீதிமன்றங்களில் ஸ்ரீசாந்த் முறையிட்டார். பிசிசிஐ ஒழுங்குமுறை குழுவின் ஆணையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் தண்டனைக் காலம் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து பிசிசிஐ மத்தியஸ்தர் நீதிபதி டிகே.ஜெயின் (ஓய்வு) இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இதில் ஸ்ரீசாந்தின் ஆயுள் தடையை குறைக்க முடிவு செய்து உத்தரவிட்டார். இதன்படி 13.9.2013 முதல் 7 ஆண்டுகள் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் ஆட தடை விதித்தார். அதன் பின் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்வை ஸ்ரீசாந்த் தொடரலாம். அவரது கிரிக்கெட் ஆடும் காலம் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில், அவரது தடைக்காலத்தை குறைப்பதே நீதியாக இருக்கும் என ஜெயின் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதனால் மீண்டும் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதையடுத்து அவரை கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக கேரள அணியின் பயிற்சியாளர் டினு யோஹணன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

மீண்டும் விளையாட ஸ்ரீசாந்த் ஆர்வத்துடன் உள்ளார். கடுமையாகப் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அவருடன் தொடர்பில் நாங்கள் உள்ளோம். அவரைத் தேர்வு செய்யக் கருதியுள்ளோம். ஆனால் அது அவருடைய உடற்தகுதி, ஆட்டத்திறனை பொறுத்தே அமையும். தற்போது அவருக்கான கதவு திறந்துள்ளது என்றார்.

Related posts: