வேலணை வேங்கைகள் வெற்றி!

Tuesday, January 15th, 2019

பானுசனின் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் விதுசனின் அச்சுறுத்தலான பந்துவீச்சு ஆகியன கைகொடுக்க வேலணை வேங்கைகள் அணி 55 ஓட்டங்களால் இலகு வெற்றியொன்றைப் பதிவு செய்தது.

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுப்பர் லீக் என்னும் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் முதலாவது பருவகாலப் போட்டிகள் 12 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏ பிரிவில் ஜப்னா பந்தேர்ஸ், பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ், அரியாலை வோரியர்ஸ், நல்லூர் பிறவுண் கொஸ் அணிகளும் பி பிரிவில் வேலணை வேங்கைகள், கொக்குவில் ஸ்ரார்ஸ், பண்ணை ரில்கோ கிளாடியேற்றர்ஸ் மற்றும் ரில்லியூர்ரைரன்ஸ் ஆகிய அணிகளும் உள்ளன.

கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டியில் ரில்லியூர் ரைரன்ஸ் அணியை எதிர்த்து வேலணை வேங்கைகள் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற ரில்லியூர் ரைரன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதற்கிணங்க களமிறங்கிய வேலணை வேங்கைகள் அணியினர், 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் பானுசன் 45, ஆதித்தன் 27, லிங்கநாதன் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ரைரன்ஸ் அணி சார்பாக மதுசன் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஸ்ணு பிரகாஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

178 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலளித்தாடிய ரில்லியூர் ரைரன்ஸ் அணியினர், 19 பந்துப் பரிமாற்றங்களில் 122 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்து 55 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர். துடுப்பாட்டத்தில் கஜந்தன் 35, அஜித் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் வேலணை வேங்கைகள் சார்பாக விதுசன் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கோகுலன் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக வேலணை வேங்கைகள் அணியின் விதுசன் தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: