வெளுத்து வாங்கிய ராகுல்: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய பஞ்சாப்!

Monday, May 7th, 2018

ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

இவ்விரு அணிகள் மோதும் போட்டி இந்தூரில் நடைபெற்றது. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக பட்லர்-சார்ட் களமிறங்கினர். சார்ட் 2, ரஹானே 5 என வெளியேற, அடுத்து வந்த சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார் பட்லர்.

இருவரும் நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், சாம்சன் 28, அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 12, திரிபதி 11 என வந்த வேகத்தில் பெளலியன் திரும்பியதால் ராஜஸ்தான் அணியின் ரன் விகிதமும் குறையத் துவங்கியது.

இருப்பினும் பட்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அரை சதம் கடந்தார். 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பட்லர் வெளியேற என ராஜஸ்தான் அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், அன்ட்ரிவ் டை 2 விக்கெட்டும், அஸ்வின், ராஜ்பூட், அக்சார் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் கெய்ல் 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். அடுத்து வந்த அகர்வால் 2 ஓட்டங்களில் வெளியேற பஞ்சாப் அணி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின் ராகுலுடன் ஜோடி சேர்ந்த நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பஞ்சாப் அணியின் ரன் விகிதமும் சீரான வேகத்தில் எகிறியது.

கருண் நாயர் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், அக்சர் பட்டே 4 என வெளியேற, ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார் ராகுல்.

ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ராகுல் 54 பந்துகளில் 84 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியாக பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மூன்றாவது இடத்திலிருந்த கொல்கத்தா அணி நான்காவது இடத்தையும், ராஜஸ்தான் அணி கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

Related posts: