நாட்டுக்காக இந்தியா வழங்கிய வாய்ப்பை நிராகரித்தார் மஹேல!

Sunday, September 19th, 2021

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கு பதிலாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவை நியமிக்க, இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முன்வந்த போதும், மஹேல அதனை நிராகரித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை தேசிய அணியின் பயிற்சியாளராக, செயற்பட அவர் விரும்பியதால் அவர் இந்த வாய்ப்பை இழந்ததாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.

ஐபிஎல் -இல் மும்பை இந்தியன்ஸின் பயிற்சியாளராக இருக்கும் ஜெயவர்த்தன, அந்த அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்து வருகிறார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் விதிகளின்படி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும்போது மற்றொரு பதவியை ஒருவர் வகிக்க முடியாது என்று தெளிவாகக் கூறுகிறது.

எனினும் இலங்கை தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்தால் அந்த விதிகள் பொருந்தாது என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

மஹேல ஜெயவர்த்தன இலங்கை அணிக்காக 149 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 448 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். அவர் டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டில் 11 ஆயிரத்து 814 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரத்து 650 ஓட்டங்களை பெற்றுள்ளார். 20 க்கு 20 போட்டிகளில் ஆயிரத்து 493 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஏழு இரட்டை சதங்களுடன் மொத்தம் 54 சதங்களை பெற்றுள்ளார். மேலும், 80 ஐபிஎல் போட்டிகளில், அவர் 28.60 சராசரியில் ஆயிரத்து 802 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டிலும் அவர் சதம் அடித்துள்ளார். இதற்கிடையில், டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக சாஸ்திரி அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் 20 க்கு 20 உலகப் போட்டிகள் முடிந்தவுடன் இந்தியாவின் முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளே, இந்திய கிரிக்கெட் சபையால் தொடர்பு கொள்ளப்படுவார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: