வெளியே வர மறுத்த இலங்கை வீரர்கள் – நடந்தது என்ன?
Sunday, June 17th, 2018
இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.
மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்க வேண்டிய நிலையில் இலங்கை வீரர்கள் ஆடை மாற்றும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. நடுவர்கள் அலீம் தாரும் இயன் கோல்டும் களத்தில் காத்திருந்தனர். வீரர்கள் வராததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நடுவர்கள் பந்தை மாற்ற முடிவு செய்ததுதான் இலங்கை வீரர்களின் கோபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. வெறும் 44.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட பந்தை ஏன் மாற்ற வேண்டும் என்று இலங்கை வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை வீரர் தனஞ்ஜெய டிசில்வா பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனாலேயே பந்தை மாற்ற அவர்கள் முடிவு செய்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் இலங்கை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா கேப்டன் தினேஷ் சண்டிமால் மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வேறு வழியின்றி பந்தை மாற்றுவதை ஏற்றுக்கொண்டது இலங்கை அணி.
இந்தப் பிரச்னை காரணமாக இரண்டு மணிநேரம் போட்டித் தடைபட்டது. பின்னர் போட்டித் தொடங்கியது. இலங்கை அணிக்கு அபராதமாக 5 ரன்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் எங்கள் வீரர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. இலங்கை வீரர்கள் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|
|


