வெளியேறியது ஐதராபாத் ; இறுதிப் போட்டியில் மும்பையுடன் மோதுகிறது டெல்லி!

Monday, November 9th, 2020

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட இத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக இறுதிசுற்றை எட்டியது.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு நுழையும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2 ஆவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, டெல்லி கெப்பிட்டல்ஸை எதிர்கொண்டது.
நேற்றிரவு அபுதாபியில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
டெல்லி அணியின் ஆரம்ப வீரர்களாக மார்க்கஸ் ஸ்டொய்னஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
3 ஓட்டங்களில் பிடியெடுக்கும் கண்டத்தில் இருந்து தப்பித்து அதிரடி காட்டிய ஸ்டொய்னஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார்.
தவானும் அதிரடி காட்ட அணியின் ஓட்ட எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்தது. அதனால் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 65 ஓட்டங்களை குவித்தது டெல்லி.
இறுதியாக டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை குவித்தது.
190 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித் தலைவர் டேவிட் வோர்னரும், பிரியம் கொர்க்கும் களமிறங்கினர்.
இரண்டாவது ஓவரின் முதல் பந்து வீச்சில் டேவிட் வோர்னர் போல்ட் முறையில் ஆட்டமிழந்து இரண்டு ஓட்டங்களுடன் நடையை கட்டினார். ரபடா வீசிய யோர்க்கர் பந்து அவரது காலில் பட்டு ஸ்டம்பை தாக்கியது.
இறுதியாக 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து, 17 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி முதன் முறையாக ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் கால் பதித்துள்ளது

Related posts: