வெற்றியை தனதாக்கிய அவுஸ்திரேலியா!

Monday, August 29th, 2016

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக இடம்பெற்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் தினேஸ் சந்திமால் 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இன்று தன்னுடைய பிரியாவிடைப் போட்டியில் விளையாடிய டில்ஷான் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.அவுஸ்திரேலியா அணி சார்பில் சம்பா 3 விக்கெட்டுக்களையும், ஹஸ்ட்டிங், ஸ்ட்ராக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். அவுஸ்திரேலிய அணிக்கு 227 எனும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 46 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆரம்ப வீரர்களாக அணித்தலைவர் வோர்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோர் ஆடுகளம் புகுந்து முதல் விக்கெட்டில் 31 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அணித்தலைவர் வோர்னர் ஆட்டம் இழந்தார்.

44 ஓட்டங்களுக்கு வேகமாக 3 விக்கெட்டுக்களை இழக்கப்பட்டாலும் இளம் வீரர் ட்ரெவ்ஸ் ஹெட் மற்றும் ஜோர்ச் பெயிலி ஆகியோர் 4வது விக்கெட்டில் 62 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பில் ஜோர்ச் பெயிலி 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்து வீச்சில் மத்தியூஸ், அபோன்சோ, டில்ருவன் பெரேரா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.போட்டியின் ஆட்ட நாயகனாக சதமடித்த சந்திமால் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் 4வது போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி தம்புள்ள மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.

1999ஆம் ஆண்டு சிம்பாப்வேயின் புலாபாயோவில் சிம்பாவே அணிக்கெதிராக ஒருநாள் அறிமுகமான டில்ஷான், இலங்கை அணிக்காக 330 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 47 அரைச்சதம் அடங்கலாக 10,290 ஓட்டங்களைக் பெற்றுள்ளார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 11 வது வீரராகவும், இலங்கை சார்பில் 4வது அதிகூடிய ஓட்டங்கள் குவித்த வீரராகவும் டில்ஷான் இடம்பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே ஓய்வை அறிவித்துள்ள டில்ஷான், இன்றைய போட்டியோடு ஒருநாள் போட்டிகளுக்கும் விடைகொடுத்துள்ளார். எனினும், அவுஸ்திரேலிய அணியுடன் ஆர். பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரின் 2வதும் இறுதியான T20 போட்டியே டில்ஷானின் இறுதி சர்வதேச போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: