விளையாடுவேனோ தெரியாது -டோனி

Friday, March 24th, 2017

வரும் 2019-ம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று இந்திய வீரர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜனவரி மாதம் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதையடுத்து மூன்று வடிவிலான கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியின் தலைவராக விராட் கோலி செயல்படுகிறார்.

35 வயதான டோனி, ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரராக மட்டும் தற்போது தொடருகிறார். இருப்பினும் 2019-ம் ஆண்டு உலக கிண்ணம் (50 ஓவர்) வரை அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. இந்த நிலையில் இந்த கேள்விக்கு டோனி நேற்று விடைகொடுத்தார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டோனியிடம், ‘2019-ம் ஆண்டு உலக கிண்ணத்தில் நீங்கள் விளையாடுவதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இருக்கிறதா?’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு டோனி பதில் அளிக்கையில், ‘100 சதவீதம் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஏனெனில் 2019-ம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது.

இந்த 2 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நடக்கலாம். குறிப்பாக இந்திய அணிக்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வரும் நான், இந்திய அணியின் போட்டி அட்டவணை எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அறிவேன். நமது அணி தொடர்ச்சியான நிறைய போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கிறது. ஆனால் தற்போது இருப்பது போல், அதே உடல்தகுதியுடன் நீடித்தால் 2019-ம் ஆண்டு உலக கிண்ணத்தை தாண்டியும் என்னால் விளையாட முடியும்’ என்றார்.

டோனி இதுவரை 286 ஒரு நாள் போட்டியும், இருபது ஓவர் கிரிக்கெட்டில் 76 ஆட்டங்களும் விளையாடி இருக்கிறார். 2007, 2011, 2015-ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளில் பங்கேற்றுள்ள டோனி 4-வது முறையாக உலக கிண்ண களம் காணுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  தியோதர் கிண்ண கிரிக்கெட்டில் ஆடாமல் ஓய்வு எடுக்கும் டோனி அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாட தன்னை தயார்படுத்தி வருகிறார்.

Related posts: