விளையாடவில்லை எனில் நட்டஈடு  – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை!

Thursday, November 10th, 2016

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மறுக்குமாயின், அதற்காக நட்டஈடு வழங்க வேண்டுமென, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுச் செயற்குழுத் தலைவர் நஜம் சேதி கோரியுள்ளார்

இது தொடர்பான கோரிக்கை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடமும் சர்வதேச கிரிக்கெட் சபையிடமும் விடுக்கப்பட்டுள்ளதாக, அவர் வெளிப்படுத்தினார்.

“இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடனும் சர்வதேச கிரிக்கெட் சபையுடனும் இடம்பெற்ற எமது அண்மைய சந்திப்புகளில், பாகிஸ்தானுடன் இந்தியா, கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும், இல்லையெனில், ஏற்படும் நட்டங்களுக்காக நட்டஈடு செலுத்த வேண்டும் என வெளிப்படுத்தினோம்” என, நஜம் சேதி குறிப்பிட்டார். அத்தோடு, பாகிஸ்தானுக்கு ஏற்படும் நட்டங்களுக்காக, சர்வதேச கிரிக்கெட் சபையும் நட்டஈடு செலுத்த வேண்டுமெனக் கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று, பல அணிகள் பங்குபெறும் தொடர்களில், இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் சேர்க்க வேண்டாமெனக் கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். “பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்கான உத்தியொன்றை இந்திய அரசாங்கம் எடுத்துள்ள நிலைமையிலும், நாட்டில் நிலவும் பொதுமக்களின் எண்ணங்களின் அடிப்படையிலும், பல நாடுகள் பங்குபெறும் தொடர்களில், இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் சேர்க்க வேண்டாமென நாம், சர்வதேச கிரிக்கெட் சபையிடம் கோருகிறோம்” என்று தெரிவித்தார்.

இதைத் தவிர, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கீழ் காணப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரை, தனி நிறுவனமாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தனி நிறுவனமாக மாற்றிய பின்னரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தின் கீழேயே அது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 CRICKET-PAK-AAMER-SETHI

Related posts: