ரென்ட் போல்டின் அபார பந்துவீச்சின் மூலமாக தொடரைக் கைபற்றிய நியூஸிலாந்து அணி!

Monday, December 25th, 2017

மேற்கிந்திய தீவுகள் எதிர் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நியூஸிலாந்து இடம்பெற்று வருகின்றது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய மேற்கிந்திய அணிக்கு முக்கிய போட்டியாக இந்த இரண்டாவது போட்டி பார்க்கப்பட்டது, ஆயினும் மீண்டும் படுதோல்வியை தழுவி தொடரை கைநழுவவிட்டுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பவீரர் ஜோஜ் வோகர் அரைச்சதம் கடந்து 58 ஓட்டங்களையும் கொலின் முன்றோ முப்பது ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர். அதன் பின் ஆடுகளம் நுழைந்த நெய்ல் வுறூம் ஆறு ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். எனினும் ரெய்லர் அரைச்சதம் கடந்து 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின் வந்த லதமும் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் ஆடுகளம் புகுந்த ஹென்றி நிக்கல்ஸ் மற்றும் அஸ்டில் அணியை தூக்கி நிறுத்தினர். இருவரும் இணைப்பாட்டமாக 130 (108) ஓட்டங்களைப் பெற்றனர். அஸ்டில் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைச்சதத்தை ஓர் ஓட்டத்தால் நழுவவிட்டார். நிக்கல்ஸ் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க நியூசிலாந்து அணி ஐம்பது ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மாகசீல்டன் கொன்றேல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

326 என்ற கடின இலக்கை நோக்கி ஆட்டத்தை அரம்பித்த மேற்கிந்திய அணிக்கு ஆரம்பமே போல்ட்டின் பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் போனது, போல்ட். இவரது பந்து வீச்சில் லூவிஸ் (10), கைல் ஹோப் (4),சை ஹோப் (23),ஹெட்மையர்(2) ஆகியோர் வரிசையாக வெளியேறினர். பின்வந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. நர்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை எட்டினார். இவர் 27 ஓட்டங்களைப் பெற்ற வேளை போல்ட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். போல்ட் கைப்பற்றிய இந்த விக்கெட்டானது இவர் ஒருநாள் போட்டியில் வீழ்த்தும் நூறாவது விக்கட்டாகும். வேகமாக 100 விக்கட்டுக்களைக் கைப்பற்றியவர்கள் பட்டியலிலும் இணைந்து கொண்டார்.

இறுதியில் விண்டீஸ் 121 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. பந்துவீச்சில் தனது சிறந்த பந்துவீச்சு பெறுதியை இன்றைய போட்டியில் பெற்ற போல்ட், பத்து ஓவர்கள் பந்துவீசி மூன்று ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட்டுக்களை கைப்பற்றினார், நியூஸிலாந்து அணி சார்பாக ஒரு போட்டியில் அதிக விக்கட்டுகளைக் கைப்பற்றிய சிறந்த பந்து வீச்சாளராக இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளார். முதலாவது இடத்தில் ரிம் சவுதி 33 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

போட்டியின் நாயகனாக  சிறந்த பந்து வீச்சை மேற்கொண்ட போல்ட் தெரிவானார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி தொடரில் முன்னிலையில் உள்ளது.

Related posts: