ரெனிஸ் தொடரில் இணுவில் இந்து சம்பியன்!

Saturday, May 26th, 2018

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ரென்னிஸ் தொடரில், 20 வயது ஆண்கள் பிரிவில் இணுவில் இந்துக் கல்லூரி அணி சம்பியனானது.

சென். ஜோன்ஸ் கல்லூரியின் ரென்னிஸ் திடலில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து இணுவில் இந்துக் கல்லூரி அணி மோதியது.

மூன்று செற்களைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது.

முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியின் சார்பில் சிம்சனும் இணுவில் இந்துக் கல்லூரி அணியின் சார்பில் அகிந்தனும் மோதினர். 2:1 என்ற செற் கணக்கில் அகிந்தன் வெற்றிபெற்று இணுவில் இந்துக் கல்லூரி அணிக்கு 1:0 என்ற முன்னிலையை வழங்கினார்.

இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி சார்பில் லிந்துயனும் இணுவில் இந்துக் கல்லூரி அணியின் சார்பில் பாலகிருஸ்ணாவும் மோதினர். 2:0 என்ற செற் கணக்கில் லிந்துயன் வெற்றிபெற்றார்.

ஒற்றையர் ஆட்டங்களில் இருவரும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றதை அடுத்து இரட்டையர் ஆட்டத்தில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரட்டையர் ஆட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியின் சார்பில் விளையாடிய யூட் தீபன், சுதர்சன் இணையை எதிர்த்து இணுவில் இந்துக் கல்லூரி அணியின் சார்பில் மாயவன், நிசாந் இணை மோதியது.

இணுவில் இந்துக் கல்லூரியின் இணை வெற்றிபெற்றதை அடுத்து அந்த அணி 2:1 (ஒட்டுமொத்தமாக) என்ற செற் கணக்கில் கிண்ணம் வென்றது.

Related posts: