ரஸல் இல்லை: நம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் !

Sunday, June 23rd, 2019

எங்களின் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிடவில்லை, நாங்கள் தகுதிபெறுவோம் எனும் நம்பிக்கை இன்னும் இருக்கிறது என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி மழையாலும் ரத்தானது.

இதனால் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ், இன்று மாலை நடக்க உள்ள போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் வெஸ்ட் இண்டீஸ் உள்ள நிலையில், அந்த அணியின் அதிரடி வீரர் ரஸல் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில், ‘எங்களின் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டதாக நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

பயிற்சிப் போட்டியில் எளிதாக தோற்கடித்தோம். அதேபோன்று நாங்கள் விளையாடுவோம். ஆதலால், அரையிறுதிக்கான வாய்ப்பு எங்களுக்கு முடிந்துவிடவில்லை என்றே நாங்கள் நம்புகிறோம். அடுத்தடுத்த போட்டிகளில் எங்கள் அணுகுமுறை தெரியும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஆனால், இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ரஸல் இடம் பெறாதது வருத்தம் தான். ஆனால், அவர் இல்லாத இடத்தை நாங்கள் சரிசெய்ய முயல்வோம். ரஸலுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை.

மற்ற வீரர்கள் அனைவரும் உடல்நலத்துடன் இருக்கிறார்கள். கடந்த கால தோல்விகள் குறித்து விரிவாக 2 நாட்கள் கலந்தாய்வு செய்தோம். இந்த கலந்தாய்வுகளின் வெளிப்பாடு நிச்சயம் ஆட்டத்தில் தெரியும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: