ரஸலின் அதிவேக சதத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கெய்ல் அணி!

Saturday, August 6th, 2016

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான 2வது தகுதிப்போட்டியில் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும், பிராவோ தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் பிராவோ களத்தடுப்பை தேர்வு செய்தார்.அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா அணிக்கு கெய்ல் 26 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 35 ஓட்டங்கள் சேர்த்தார்.

குமார் சங்கக்காரா, பொவேல், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.அதன் பின் வந்த ரஸல் அதிரடியாக விளையாடி 44 பந்தில் 3 பவுண்டரி, 11 சிக்சர்களுடன் அதிவேக சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

டி20 கிரிக்கெட்டில் ரஸல் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். தவிர, கரீபியன் லீக் தொடரில் இது அதிவேக சதமாகவும் அமைந்தது.இவரது அதிரடியால் ஜமைக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது.அந்த அணி 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 18 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் 12 ஓவரில் 130 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும் அந்த அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் சொதப்ப அந்த அணியால் 12 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 110 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.இதனால் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஜமைக்கா தல்லாவாஸ் அணி கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ்- ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related posts: