கைவிடப்பட்டது மாயமான மலேஷிய விமானத்தை தேடும் நடவடிக்கை !

Wednesday, January 18th, 2017

மூன்று ஆண்டுகளுக்கு முன் 239 பேருடன் மாயமான மலேஷியன் ஏர்லைனர் விமானத்தை தேடும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகவும் இது இந்திய பெருங்கடலில் 120,000 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான பகுதியில் இடம்பெற்ற பயனற்ற தேடுதலுக்கு பின் கவலையுடன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலியா, மலேஷியா மற்றும் சீனா வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இதனை பொறுப்பற்ற முடிவு என்று குறிப்பிட்டிருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி செல்லும் வழியிலேயே எம்.எச்370 விமானம் நடுவானில் மாயமானது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 20 விமானப் பாகங்களில் ஏழு மாத்திரமே காணாமல்போன போயிங் 777 விமானத்தினுடையது என்பதற்கான சாத்தியம் வலுத்துள்ளது.

விமானம் அதி வேகமாக இந்திய சமுத்திரத்திற்குள் விழுந்திருப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதென 2016 நவம்பரில் வெளியான அறிக்கை ஒன்று குறிப்பிட்டிருந்தது. யாரேனும் ஒருவர் விமானத்தின் தகவல் தொடர்பை வேண்டுமென்று துண்டித்து விட்டு அதனை இந்திய பெருங்கடலுக்குள் ஆயிரக்கணக்கான மைல்கள் செலுத்தி இருக்கலாம் என்று விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் மூன்று நாடுகளும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னரும் விமானம் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதை கண்டறிவதற்கான புதிய தகவல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் அவ்வாறான ஆதாரம் கிடைக்கும் என்று மூன்று நாடுகளும் நம்புகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பாதிக்கப்பட்ட குடும்ப ஆதரவு குழுவான ‘வொயிஸ்370’ தேடுதலை தொடர அழுத்தம் கொடுத்துள்ளது. தற்போது தேடும் இடத்தில் இருந்து வடக்காக 25,000 சதுர கிலோமீற்றர் பகுதி தேடுதலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அந்த குழு கோரியுள்ளது. குறித்த பகுதி அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு சபை கடந்த டிசம்பரில் பரிந்துரைத்த பகுதியாகும்.

எம்.எச்370 விமானம் நவீன விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய புதிராக மாறியுள்ளது. விமானத்தை தேடுவதற்கு பல மில்லியன் டொலர் செலவிட்டு ஆழ்கடலில் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீற்றர்கள் சோதனையிட்டபோதும் இதுவரை தேவையான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

coltkn-01-18-fr-08151622008_5158145_17012017_MSS_CMY

Related posts: