யாருக்கு 2019 ஆண்டக்கான உலகக்கோப்பை?

Saturday, June 1st, 2019

இங்கிலாந்தில் 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது குறித்து பார்ப்போம்.

12வது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றைய தினம் இங்கிலாந்தின் லண்டன் நகரில் தொடங்கியது. 10 அணிகள் பங்குபெறும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் சமபலத்துடன் மோதவுள்ளன.

நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் போட்டியை நடத்தும் இங்கிலாந்தை, தென் ஆப்பிரிக்க அணி எதிர்கொண்டது. ஜாம்பவான் வீரர் டி வில்லியர்ஸ் இல்லாத நிலையில், இந்த உலகக்கோப்பையில் களமிறங்கியிருக்கும் தென் ஆப்பிரிக்கா தனது கடந்த கால வரலாற்றை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய போட்டியில் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை சொந்த மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய பலம் என்று கூறப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் அதனை நிரூபித்துள்ளது. அந்த அணியில் துடுப்பாட்டம், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்து வகையிலும் சமபலத்துடனான வீரர்கள் உள்ளனர். எனவே, இங்கிலாந்துக்கு கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

உலகக்கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்துடன் நடந்த ஒருநாள் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை பாகிஸ்தான் வெளிப்படுத்தியது. தொடரை இழந்தாலும், அந்த அணியின் துடுப்பாட்டம் வரிசை மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. எனவே, பாகிஸ்தான் அணிக்கும் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது.

ஆனால், இன்று தனது முதல் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்ட பாகிஸ்தான், 21.4 ஓவரில் 105 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி, வெற்றி பெற்று தனது கணக்கை தொடங்கியுள்ளது. எனினும், இங்கிலாந்தின் தட்பவெட்ப நிலை கூட பாகிஸ்தான் வீரர்கள் தடுமாற காரணமாக இருக்கலாம் என்பதால், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை அந்த அணி வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி வீரர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, இளம் கேப்டனான ஹோல்டரின் தலைமையில் வெற்றியுடன் உலகக்கோப்பையை தொடங்கியுள்ளது. அந்த அணியில் அனுபவ வீரர் கெய்ல் அரைசதம் விளாசியிருப்பது சக வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. எனவே, வெஸ்ட் இண்டீஸும் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தும் எனலாம்.

நாளை நடக்கும் லீக் போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இலங்கை அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சை மிகப்பெரிய பலமாக கூறலாம். காரணம், அனுபவ வீரரான மலிங்காவின் மிரட்டலான பந்துவீச்சு தான். ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் மும்பை அணிக்கு கோப்பைப் பெற்றுத் தந்தார்.

ஆனால், துடுப்பாட்ட வரிசையில் ஏஞ்சலோ மேத்யூஸ், குசால் பெரேரா, திசார பெரேரா ஆகியோரையே இலங்கை அணி பெரிதும் நம்பியுள்ளது. இவர்களுடன் மற்ற வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இலங்கை அணிக்கும் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை, கேன் வில்லியம்சன் தலைமையில் ராஸ் டெய்லர், ட்ரெண்ட் போல்ட், கப்தில் போன்ற சிறப்பான வீரர்களை கொண்டுள்ளது. டெய்லருக்கு கடைசி உலகக்கோப்பை என்பதால் அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கப்தில், வில்லியம்சன், மன்ரோ, லாதம் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் மிரட்டக்கூடியவர்கள். பந்துவீச்சிலும் மிரட்ட டிம் சௌதி, சோதி, போல்ட் ஆகியோரும் உள்ளனர்.

கோஹ்லி தலைமையில் சிறப்பான ஃபார்மில் உள்ள இந்திய அணியும் உலகக்கோப்பையை கைப்பற்றும் கணிப்பில் உள்ளது. டோனிக்கு கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப சக அணி வீரர்கள் முற்படுவார்கள். ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ராகுல் போன்ற துடுப்பாட்ட வீரர்களும், ஹர்திக் பாண்ட்யா, விஜய் ஷங்கர், ஜடேஜா போன்ற ஆல்-ரவுண்டர்களும், புவனேஷ்வர்குமார், பும்ரா, ஷமி போன்ற பந்துவீச்சாளர்களும் மிரட்ட தயாராக உள்ளனர். இந்திய அணியும் சமபலத்துடன் இருப்பதால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பெரிய அளவில் உள்ளது.

உலகக்கோப்பையில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலிய அணியில், தற்போது தடை நீங்கி ஸ்மித் மற்றும் வார்னர் இணைந்துள்ளனர். பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியில் அனுபவ வீரர் ஷான் மார்ஷ், அதிரடி வீரர் மேக்ஷ்வெல், ஸ்டார்க் ஆகியோர் இருப்பதால் அவுஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

டாப்-8 நாடுகளை தவிர்த்து, திடீரென மிரட்டக் கூடிய அணியாக வங்கதேசம் உள்ளது. மோர்தசா தலைமையிலான வங்கதேச அணி, சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முன்னதாக நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை வங்கதேசம் கைப்பற்றி அசத்தியது. எனவே, இந்த தொடரில் அந்த அணி ஆச்சரியம் அளிக்கும் வகையில் எந்த அணியை வேண்டுமானாலும் வெளியேற்றலாம்.

வங்கதேச அணியைப் போல் திடீரென மிரட்டக்கூடிய அணியாக ஆப்கானிஸ்தான் அணி உள்ளது. அந்த அணியில் இளம் வீரர் ரஷீத் கான் சர்வதேச போட்டிகளில் கலக்கி வருகிறார். துடுப்பாட்டத்தில் முகமது நபி, அஸ்கார் ஆப்கன் ஆகியோர் சிறப்பாக செயல்படுபவர்கள். இந்த அணியும் உலகக்கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: