யாருக்கு வெற்றி? – வடக்கின் போரில் விறுவிறுப்பு!

Saturday, March 9th, 2019


வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் விளையாடுவதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 14 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 121 ஓட்டங்களை எடுத்து ஆடிவருகிறது. இதனால் நாளை மூன்றாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் விறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 113ஆவது கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மத்திய கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி  சீரான இடைவெளியில் தனது இலக்குகளை இழந்த்து. இருந்த போதிலும் தெ. டினோசன் நிலைதாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து கௌரவமான இலக்கை நோக்கி அணியை கொண்டு சென்றார்.அவருடன் இணைந்து அபினாஸ் ஆடினார்.

டினோசன் 134 பந்துகளுக்கு முகம் கொடுத்து 98 ஓட்டங்களை எடுத்த நிலையில் , வி.விஜய்ஸ்காந்தின் பந்து வீச்சில் இ.ராஜ்கிளின்ரனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அபினாஸ் 28 பந்துகளுக்கு முகம் கொடுத்து 24 ஓட்டங்களை எடுத்த நிலையில், வி.விஜய்ஸ்காந்தின் பந்து வீச்சில் ப.இந்துஜனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையுமிந்த்து.

மத்திய கல்லூரி அணியில் பந்து வீசிய க.இயலரசன் 15 ஓவர்களில் 54 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களைச் சரித்தார். வி.விஜய்ஸ்காந்த் 11.5 பந்து ஓவர்களில் 43 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். செ. மதுசன் மற்றும் க.பிரவீன்ராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களையிழந்து 59 ஓட்டங்களை எடுத்திருந்த்து.

மத்திய கல்லூரி அணிக்கு வி.விஜய்ஸ்காந்த் அதிரடியாக ஆடி 31 பந்துகளுக்கு முகம் கொடுத்து 41 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஹேமதுசனின் பந்து வீச்சில்  ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய க.இயலரசன்   239 பந்துகளுக்கு முகம் கொடுத்து 77 ஓட்டங்களை பெற்ற நிலையில் , ஈ . தனுசனின் பந்து வீச்சில் க. சபேசனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் மத்திய கல்லூரி அணி 195 ஓட்டங்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுக்களையுமிழந்த்து.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பில் பந்து வீச்சில்அ. சரண் 20 ஓவர்கள் வீசி 54 ஓட்டங்களை விட்டுகொடுத்து 3 விக்கெட்டுக்களைச் சரித்தார். தெ.டினோசன், ம.ஹேமதுசன் மற்றும் டி.எல்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.  அபினாஸ் ஒரு விக்கெட்டைச் சரித்தார்.

மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 14 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது.

இரண்டாம் நாள் போட்டி முடிவில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 39 பந்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ஓட்டங்களை எடுத்துள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ந. சௌமியன் 104 பந்துகளுக்கு முகம் கொடுத்து  46 ஓட்டங்களுடனும் சி. தனுஜன் 132 பந்துகளுக்கு முகம் கொடுத்து 57 ஓட்டங்களுடனும்  ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளனர்.

Related posts: