மெக்சிகோவின் தடையை தகர்க்கும் முனைப்பில் பிரேசில்!

Monday, July 2nd, 2018

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி மெக்சிகோவை சமரா ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

லீக் சுற்றில் சுவிட்சர்லாந்துடன் டிரா (1-1) கண்ட பிரேசில் அணி அதன் பிறகு கோஸ்டாரிகா (2-0) செர்பியா (2-0) அணிகளை தோற்கடித்து தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. நெய்மார் பிலிப் காட்டினோ கேப்டன் தியாகோ சில்வா கேப்ரியல் ஜீசஸ் உள்ளிட்டோர் பிரேசிலை தாங்கிப்பிடிக்கும் நட்சத்திர வீரர்களாக மின்னுகிறார்கள்.

இதில் நெய்மார் காட்டினோ ஏற்கனவே தலா ஒரு மஞ்சள் அட்டை பெற்றிருப்பதால் இன்னொரு மஞ்சள் அட்டை வாங்கினால் அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாத நிலை ஏற்படும். அதனால் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் மிகுந்த கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

கணிக்க முடியாத அணிகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் மெக்சிகோ லீக் சுற்றில் உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பேரதிர்ச்சி அளித்தது. தென்கொரியாவையும் (2-1) பதம் பார்த்த மெக்சிகோ கடைசி லீக்கில் சுவீடனுடன் (0-3) தோல்வியை தழுவியது. ஜெர்மனியை போன்று பிரேசிலின் கனவையும் சிதறடிக்கும் முனைப்புடன் மெக்சிகோ அணியினர் வியூகங்களை வகுத்துள்ளனர்.

கோல் கீப்பர் குல்லர்மோ ஒச்சாவ் மற்றும் மெக்சிகோ அணிக்காக சர்வதேச போட்டிகளில் 49 கோல்கள் அடித்துள்ள அனுபவம் வாய்ந்த ஜாவியர் ஹெர்னாண்டஸ் ஆகியோர் அந்த அணியின் நம்பிக்கை தூண்கள் ஆவர்.

2014-ம் ஆண்டு உலக கோப்பையில் பிரேசிலுக்கு எதிரான லீக்கில் குல்லர்மோ ஒச்சாவ் ஒரு கோல் கூட அடிக்க விடாமல் அந்த ஆட்டத்தை கோல் இன்றி டிராவுக்கு கொண்டு வந்தது நினைவு கூரத்தக்க விஷயமாகும். எல்லா வகையிலும் மெக்சிகோ முட்டுக்கட்டை போடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் வெற்றி வாய்ப்பில் பிரேசிலின் கையே சற்று ஓங்கி நிற்கிறது.

Related posts: