முத்தரப்பு ஒருநாள் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது அவுஸ்திரேலியா!
 Tuesday, June 28th, 2016
        
                    Tuesday, June 28th, 2016
            
முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த யூன் 3ம் திகதி முதல் நடைபெற்று வந்தது. இதில் நேற்று பிரிட்ஜ்டவுனில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக மேத்யூவாடே 57 ஓட்டங்களும், ஆரோன் பிஞ்ச் 47 ஓட்டங்களும் எடுத்தனர். அதேபோல் அணித்தலைவர் ஸ்மித் 46 ஓட்டங்கள் எடுத்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், ஹோல்டர், கேப்ரியல் தலா 2 விக்கெட் எடுத்தனர். பிராத்வொயிட், பொல்லார்ட், நரைன், பென் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதன் பின்னர் 271 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்க வரிசை வீரர்கள் ஏமாற்றினர்.
ஜான்சன் சார்லஸ் அதிகபட்சமாக 45 ஓட்டங்கள் எடுத்தார். ரம்டின் 40 ஓட்டங்களும், ஹோல்டர் 34 ஓட்டங்களும், நரேன் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
இருப்பினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 45.4 ஓவரில் 212 ஓட்டங்களில் மேற்கிந்திய தீவுகள் அணி சுருண்டது. இதனால் 58 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கிண்ணத்தை கைப்பற்றியது.
அவுஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஹாசில்வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        