முதலாவது போட்டியில் பிரசாத் இல்லை!

Tuesday, May 17th, 2016

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணியின் தலைமை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் கலந்துகொள்ள மாட்டாரென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் முதலாவது பயிற்சிப் போட்டியின்போது தோட்பட்டையில் காயமடைந்த தம்மிக்க பிரசாத், நேற்று நிறைவடைந்த இரண்டாவது பயிற்சிப் போட்டியில் பங்கேற்றிருக்கவில்லை. எனினும், முதலாவது டெஸ்டில் பங்குபெறுவார் என்ற நம்பிக்கை காணப்பட்டது.

எனினும், முதலாவது டெஸ்டில் அவர் பங்குபெறமாட்டார் என்பதை உறுதிப்படுத்திய இலங்கை அணியின் பயிற்றுநர் கிரஹம் போர்ட், நாளாந்த அடிப்படையில் அவர் அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அத்தோடு, இரண்டாவது, மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்குபெறுமளவுக்கு, அவரைத் தயார்படுத்த வேண்டிய தேவையிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முன்னைய இங்கிலாந்துத் தொடரில், இரண்டாவது டெஸ்டை இலங்கை வென்று, அத்தொடரைக் கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றிய தம்மிக்க பிரசாத்தின் இழப்பு, இலங்கைக்கு மிகப்பெரிய இழப்பாக அமையுமெனக் கருதப்படுகிறது.

மறுபுறத்தில், இலங்கை அணிக்கும் லெய்செஸ்டர்ஷெயர் அணிக்குமிடையிலான பயிற்சிப் போட்டியில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள், ஓரளவு சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தினர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தசுன் ஷானகவின் 112, குசால் மென்டிஸின் 65, ரங்கன ஹேரத்தின் 55, கௌஷால் சில்வாவின் 38, டினேஷ் சந்திமாலின் 30 ஓட்டங்களின் துணையோடு, 367 ஓட்டங்களைப் பெற்றது. லெய்செஸ்டர்ஷெயர் அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 375 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியது. இதில், ரங்கன ஹேரத், மலிந்த சிரிவர்தன இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை அணி தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய போது, திமுத் கருணாரத்னவின் ஆட்டமிழக்கா 100, கௌஷால் சில்வாவின் 43, லஹிரி திரிமான்னவின் ஆட்டமிழக்காத 40 ஓட்டங்களின் துணையோடு, 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றபோது, இப்போட்டி நிறைவுக்கு வந்திருந்தது.

Related posts: