மீண்டும் முதலிடத்தை பிடித்தார் செரீனா!

Wednesday, February 1st, 2017

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி முடிவுகள் அடிப்படையில் சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்டு வந்து 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (7,780 புள்ளிகள்) மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

4வது சுற்றில் தோல்வி கண்ட ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (7,715) ஒரு இடம் சறுக்கி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிலிஸ்கோவா (5,270) 2 இடங்கள் ஏற்றம் கண்டு 3வது இடத்தையும், முதல் சுற்றில் தோல்வி கண்ட ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (5,073) 4வது இடத்திலும் உள்ளனர்.

மேலும், 3வது சுற்றில் தோல்வியை சந்தித்த சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவா (4,985) 5வது இடத்தை பிடித்துள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் 3வது சுற்றில் தோல்வி கண்ட அமெரிக்காவின் மாடெக் சான்ட்ஸ் பெதானி (10,135) முதலிடத்தில் தொடருகிறார்.

செக் குடியரசு வீராங்கனை சபரோவா (8,500) 6 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை தனதாக்கினார். இந்திய வீராங்கனை சானியா மிர்சா (6,525) 2வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆடவர் ஒற்றையர் தர வரிசையில் அவுஸ்திரேலிய ஓபனில் 4வது சுற்றில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே (11,540) முதலிடத்தில் உள்ளார்.

2வது சுற்றில் தோல்வி கண்ட செர்பியா வீரர் ஜோகோவிச் (9,825) 2வது இடத்திலும் அரையிறுதியை எட்டிய சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா (5,695) முன்னேறி 3வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரான்ஸ் வீரர் நிகோலஸ் மகுட் முதலிடத்தில் தொடருகிறார்.

201701310559051189_Serena-Williams-regains-No-1-ranking_SECVPF

Related posts: