மியாமி டென்னிஸ்: கால்இறுதிக்கு வீனஸ் வில்லியம்ஸ் தகுதி!

Wednesday, March 29th, 2017

மியாமி டென்னிஸ் போட்டியில் கெர்பர், வீனஸ் வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி கால்இறுதிக்கு முன்னேறியது.

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் துனிசியா வீரர் மாலெக் ஜாசிரியை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல்போர்டோவை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் டேவிட் கோபின் (பெல்ஜியம்), தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு), நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் வெரேவ் (ஜெர்மனி), அட்ரியன் மனரினோ (குரோஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று வீராங்கனை ரிசா ஒசாகியை (ஜப்பான்) எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஸ்வெட்லனா குஸ்னெட்சோவாவை (ரஷியா) சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்ற ஆட்டங்களில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), லூசி சபரோவா (செக்குடியரசு), மிர்ஜனா லூசிச் பாரோனி (குரோஷியா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி கால்இறுதிக்குள் நுழைந்தனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)-பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு) 1-6, 6-1, 10-4 என்ற செட் கணக்கில் டிமா பாபோஸ் (ஹங்கேரி)-அனஸ்டாசியா பாவ்லுசென்கோ (ரஷியா) ஜோடியை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறியது

Related posts: