மாயை  உலகில் வாழுகிறார் சாஸ்திரி – கங்குலி விமர்சனம்!

Thursday, June 30th, 2016

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி கிடைக்காமல் போனதற்கு நான் தான் காரணம் என்று ரவி சாஸ்திரி நினைத்தால் அவர் முட்டாள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கங்குலி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ளே தெரிவு செய்யப்பட்டார். இந்த பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்து இருந்த போதிலும் ரவி சாஸ்திரிக்கும், அனில் கும்ப்ளேவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் கடைசியாக அனில் கும்ப்ளே பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டார்.

பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் ரவிசாஸ்திரி கலந்து கொண்ட போது, கங்குலி கலந்து கொள்ளவில்லை. இதனால் ரவி சாஸ்திரி தெரிவு செய்யப்படாததற்கு கங்குலி தான் காரணம் என பேசப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி, எனக்கு யார் மீதும் கோபமில்லை, அந்த நாளில் மட்டுமே அதிருப்தி அடைந்தேன். கங்குலியுடன் என்ன பிரச்சனை என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். என்னை நேர்காணல் செய்த போது அவர் அங்கு இல்லை, அவருக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்பது தான் எனக்கு அதிருப்தியை தந்தது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரவி சாஸ்திரியின் கருத்து தன்னை காயப்படுத்தியுள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து கங்குலி கூறுகையில் ரவி சாஸ்திரி கருத்துகள் என்னை காயப்படுத்தியதுடன்  வருத்தம் அடையவும் வைத்துள்ளது.

அவரின் கருத்துகள் தனி மனிதரை குறிவைப்பது போல் உள்ளது. அவருக்கு பயிற்சியாளர் பதவி கிடைக்காமல் போனதற்கு நான் தான் காரணம் என்று நினைத்தால் அவர் முட்டாள்களின் உலகில் வாழ்வதாக அர்த்தம். எனக்கு அதே தினத்தில் வேறு முக்கிய பணி இருந்ததால், அவரது நேர்காணலில் பங்குபெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related posts: