போட்டிகளின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் – குசலை வாழ்த்தும் பிரபலங்கள்!

Sunday, February 17th, 2019

குசல் ஜனித் பெரேராவின் போராட்ட சதத்தோடு இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் த்ரில்லர் வெற்றி ஒன்றினை பதிவு செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 153 ஓட்டங்களை குவித்த குசல் பெரேரா, தென்னாபிரிக்கா ௲ இலங்கை இடையிலான குறித்த டெஸ்ட் போட்டியை வரலாற்றில் அனைவரும் நினைவுகூறும்படியான போட்டி ஒன்றாக மாற்றியிருந்தார்.

குசல் பெரேராவின் இந்த போராட்ட சதத்தை இலங்கை அணியின் இரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், குசல் பெரேராவிற்காக கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துக்களை சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான மஹேல ஜயவர்தன குசல் பெரேராவைப் புகழும் போது, அதிக அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் மிகச்சிறந்ததொரு துடுப்பாட்ட இன்னிங்ஸை வெளிப்படுத்தியிருந்தார் என பாராட்டியிருந்தார்.
அதோடு, மஹேல ஜயவர்தன மேலும் குசல் பெரேரா இப்போட்டியின் மூலம் தனது சாமர்த்திய தன்மையினையும், தனது மனவலிமை உறுதியினையும் அனைவருக்கும் காட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் இலங்கை ௲ தென்னாபிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியின் வர்ணனையாளர்களில் ஒருவராகவிருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆர்னோல்ட் குசல் பெரேராவின் துடுப்பாட்டம் மிகவும் உயர்தரமானதாக இருந்தது என தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

அதோடு குசல் பெரேராவிற்கு இலங்கை அணி உருவாக்கிய அதி சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்காரவின் வாழ்த்துக்களும் கிடைத்திருந்தது. தனது டுவிட்டர் கணக்கில் குசல் பெரேராவின் துடுப்பாட்டம் சாத்தியமே இல்லாத ஒன்று என வியந்த குமார் சங்கக்கார, இலங்கை அணிக்கும் அதன் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்கவுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

தமது சகவீரர்களான அஞ்சலோ மெதிவ்ஸ், தனுஷ்க குணத்திலக்க போன்றோரிடம் இருந்தும் குசல் வாழ்த்துக்களைப் பெற்றிருக்கின்றார்.

அதேவேளை மெதிவ்ஸ், குணத்திலக்க ஆகிய இருவரும் குசல் பெரேரா மட்டுமில்லாது இப்போட்டியில் சிறப்பாட்டத்தை காட்டிய அறிமுக சுழல் வீரர் லசித் எம்புல்தெனியவிற்கும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இடதுகை சுழல் பந்துவீச்சாளரான லசித் எம்புல்தெனிய இப்போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சுருட்டி, தனது கன்னி சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது இலங்கை வீரராக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஒருபுறமிருக்க வெளிநாட்டு வீரர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் குசல் பெரேராவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் பிசொப் பெரேராவின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க கூடிய ஒன்று குறிப்பிட்டிருந்தார்.

இங்கிலாந்தை மையமாக கொண்டு செயற்படும் பிரபல்யமிக்க கிரிக்கெட் ஆய்வு இணையதளம் ஒன்றின் கிரிக்கெட் பகுப்பாய்வாளரான ப்ரெட்டி வைல்டே, உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சு தொகுதியினை கொண்டிருக்கும் அணியொன்றுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வைத்து வெளிப்படுத்தப்பட்டிருந்த குசல் பெரேராவின் துடுப்பாட்டம் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் பதியப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார்.

குசல் பெரேரா ஒருபுறமிருக்க இந்திய அணியின் சுழல் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், அவுஸ்திரேலிய அணி வீரர் கெலும் பெர்குஸன் ஆகியோர் இலங்கை அணிக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர்.
இதில், ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்தகாலங்களில் தான் பார்த்த மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி இலங்கை ௲ தென்னாபிரிக்க அணிகள் இடையிலான போட்டி எனக் குறிப்பிட்டதோடு, கெலும் பெர்குஸன் இலங்கை அணியின் கடைசி விக்கெட் இணைப்பாட்டம் மிகச்சிறப்பாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.

தென்னாபிரிக்க ௲ இலங்கை அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விஷ்வ பெர்னாந்து ஜோடி கடைசி விக்கெட்டுக்காக பகிர்ந்திருந்த 78 ஓட்டங்கள், டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் வெற்றி பெற்ற அணியொன்று நான்காம் இன்னிங்ஸில் பெற்ற அதிகூடிய இணைப்பாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: