பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை: ஜாம்பவான் ஜெயசூர்யா குமுறல்!
Friday, September 28th, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூர்யா, ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணி விரைவாக வெளியேறியது குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஆசிய கிண்ண தொடரில் இலங்கை, ஹாங்காங் அணியில் விரைவிலேயே வெளியேறின.
இந்நிலையில், இலங்கை அணி தொடரை விட்டு வெளியேறியது குறித்து, அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜெயசூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘தற்போதைய நிலைமையை பார்க்கையில் மிகவும் வேதனையாக உள்ளது. எங்கள் கிரிக்கெட்டை நினைத்து இந்நேரத்தில் பெருமைபட்டு கொள்வதற்கு ஒன்றுமில்லை.
நீங்கள் தோல்வியுற்றால் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள், ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அது நடக்கும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. அதிலிருந்து வெளியே வருவதற்கு இதுதான் சிறந்த தருணம்.
ஏனெனில், இதை விட மோசமானது எதுவும் இல்லை. சில அடிப்படை தவறுகளை அவர்கள் எப்படி செய்தார்கள் என்பதில் நான் அதிர்ச்சியடைந்தேன். விக்கெட்டுகள் வீழ்ந்த விதம் மிக மோசமாக இருந்தது.
துடுப்பாட்ட வீரர்களுக்குள் நம்பிக்கை இல்லை. நானும், அரவிந்த டி சில்வாவும் கண்களில் பேசிக்கொண்டு ஒருவரையொருவர் அழைக்காமலேயே ஓட்டங்களை எடுப்போம்.
ஒரு பெரிய கவலையுடன் தொடங்கும் வீரர்களால் சரியாக முடிக்க முடியாது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் எப்படி ஆட்டத்தினை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
பிரச்சனைகளை சரிசெய்யாத வரையில், நாம் முன்னோக்கி நகர்வதில் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்வோம். இந்த பிரச்சனைகளை சரி செய்யவில்லை என்றால், சாம்பியன் டிராபியில் விளையாடும் 8 அணிகள் மற்றும் உலக கிண்ணம் விளையாடும் 10 அணிகளில் இருந்து எதிர்காலத்தில் நாம் காணாமல் போவோம்.
சில கிரிக்கெட் விளையாடும் புதிய அணிகள் தொழில்முறையுடன் செயல்படுகின்றன. எனவே, தற்போதைய சூழலில் யாரையும் நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சிறிய அணிகள் அதிகமாக வெளிப்படுத்துகின்றன மற்றும் அவை அச்சுறுத்தக்கூடியவை.
தற்போதைய நிலையில் மூன்று வித கிரிக்கெட்டிலும் நாம் பின் தங்கியுள்ளோம். அத்துடன் நம் வீரர்களின் உடற்தகுதி எனக்கு கவலை அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


