பாகிஸ்தானுடன் விளையாடும்படி இந்தியாவுக்கு நெருக்கடி?

Monday, December 5th, 2016

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடும்படி இந்தியாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகாரியார்கான் கூறியுள்ளார்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்துவதால், அந்த நாட்டு அணியுடன் இப்போதைக்கு கிரிக்கெட் உறவு இல்லை என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவாக இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அண்மையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டவருமான சகாரியார்கான் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

எங்களுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடுங்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை நாங்கள் கெஞ்சவில்லை. அப்படியொரு எண்ணத்தை வைத்துக்கொள்ள வேண்டாம். 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியுடன் 6 நேரடி கிரிக்கெட் தொடர்களில் விளையாட சம்மதித்து அதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அவர்கள் (இந்தியா) சொன்னபடி செய்யவில்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு உரிய மதிப்பு அளித்து செயல்படும்படி இந்தியாவை நிர்ப்பந்திக்க, ஒரு கிரிக்கெட் தேசமாக எல்லா உரிமையும் எங்களுக்கு உண்டு. 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையே முழுமையான தொடர் எதுவும் நடைபெறவில்லை. இப்போதைக்கு உடனடியாக இரண்டு நேரடி தொடர்களில் விளையாட இந்தியா முன்வர வேண்டும்.

ஒப்பந்தத்தின்படி மேற்கண்ட காலக்கட்டத்தில் நாங்கள் நடத்த வேண்டிய தொடர்களின் எண்ணிக்கை 4. அதாவது இது எங்களது உள்ளூர் போட்டி போன்றதாகும். பாகிஸ்தானுடன் விளை யாட இந்தியா தொடர்ந்து மறுப்பதால் அதனால் மிகப்பெரிய வருவாய் இழப்பை சந்தித்துள்ளோம். ஏற்கனவே இந்த விவகாரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

ஒப்பந்தத்துக்கு உடன்பட மறுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறோம். இந்த மாதத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அப்போது இந்த பிரச்சினையை கிளப்புவோம். இவ்வாறு சகாரியார்கான் கூறினார்.

Related posts: