பாகிஸ்தானுடன் இந்தியா ஆடித்தான் ஆக வேண்டும் – ஐசிசி அதிரடி!

Wednesday, March 20th, 2019

உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியில், உடன்படிக்கையின்படி இந்திய அணி விளையாடித் தான் ஆக வேண்டும் என ஐ.சி.சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில், இந்திய துணை ராணுவப் படை வீரர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்று கண்டன குரல்கள் எழுந்தன.

இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், பி.சி.சி.ஐ மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறது. இதற்கிடையில் ஐ.சி.சி-க்கு எழுதிய கடித்தத்தில், தீவிரவாதம் உருவாகும் நாடுகளுடன் மற்ற நாடுகள் கிரிக்கெட் ஆடக் கூடாது என கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுடனான லீக் போட்டியில் இந்தியா விளையாடியே தீரும் என்ற பாணியில் ஐ.சி.சி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஐ.சி.சி தொடர்களில் பங்கேற்க அனைத்து நாடுகளும் உறுப்பினர் பங்கேற்பு உடன்படிக்கையில் கையெழுத்து இட்டுள்ளனர். அதன்படி, ஒரு தொடரின் அனைத்து போட்டிகளிலும் அவர்கள் பங்கேற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இந்த உடன்படிக்கைபடி ஒரு நாடு நடந்து கொள்ளவில்லை என்றால், எதிரணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: