பலமில்லாத அணிகளுடன் மோதி ஓட்டங்களை எடுக்கிறது இந்தியா – யூசுப்

Friday, August 4th, 2017

சச்சின் மற்றும் டிராவிட் போன்ற தரமான வீரர்கள் இல்லாத தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி, பலமில்லாத அணிகளுடன் மோதி ஓட்டங்களை குவிக்கின்றது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மொஹமட் யூசுப் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நான் கிரிக்கெட் அணியில் இருந்த போது கிரிக்கெட் அணிகள் மிகவும் கடினமானதாக இருக்கும். எங்கள் எதிர் அணிகள் அதிக பலத்துடன் இருப்பர். அவர்களுடன் விளையாடி வெற்றி பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும். நான் விளையாடும் போது இந்திய அணியில் சச்சின், ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் போன்ற ஜாம்பவான்கள் விளையாடினர். அவர்களுடன் விளையாடும் போது அதிக பாடம் கற்றுள்ளேன்.

மேலும் அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியிலும் கிலென் மெக்ராத் மற்றும் ஷேன் வோர்ன் போன்ற திறமையான வீரர்கள் தற்சமயம் இல்லை. அதே போல் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியிலும் முன்னால் இருந்தது போல் திறமையான வீரர்கள் இல்லை. இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள தற்போதுள்ள வீரர்கள், சச்சின் மற்றும் டிராவிட் போன்ற தரமான வீரர்களாக இல்லை. அவர்கள் பலமில்லாத அணிகளுடன் மோதி ஓட்டங்களை குவிக்கின்றனர்.

ஆனால் சச்சின் போன்ற வீரர்கள் வசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற திறமையான பந்து வீச்சாளர்களுடன் மோதி அதிக ஓட்டங்களை குவித்தனர். இன்றைய கிரிக்கெட் விதிமுறைகளும் எளிதாக மாறிவருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய அணித்தலைவர் விராட் கோஹ்லி நல்ல துடுப்பாட்ட வீரர். ஆனால் அவரை சச்சின், டிராவிட் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் ஒப்பிட முடியாது’ என கூறினார்.

Related posts: