ரஃபேல் நடால் தகுதி!

Thursday, August 4th, 2016

நாளை ஆரம்பிக்கவுள்ள றியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து உலகின் நான்காம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டியான் வொர்விங்கா விலகியுள்ள நிலையில், உலகின் ஐந்தாம் நிலை வீரரான ரஃபேல் நடால், பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற ரொஜர்ஸ் கிண்ணத்தின் போது, 31 வயதான வொர்விங்காவுக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் மோசமடைந்ததன் காரணமாகவே விலகியுள்ள நிலையில், உலகின் முதல் பத்து டென்னிஸ் வீரர்களில் ஐவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரொஜர் பெடரர், தோமஸ்  பேர்டிச், மிலோஸ் றாவோனிச், டொமினிக் தெய்ம் ஆகியோர் ஏற்கெனவே விலகியுள்ளனர்.

இந்நிலையில், 30 வயதான நடால், மணிக்கட்டு காயம் காரணமாக அவதிப்பட்டு, கடந்த மே மாதம் பிரெஞ் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடிய பின்னர் எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காத நிலையில், தற்போது, தனிநபர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

வொர்விங்கா காயம் காரணமாக விலகியது, சுவிற்ஸர்லாந்து அணியை பாதித்துள்ளது. உலகின் மூன்றாம் நிலை வீரரான பெடரரும் காயம் காரணமாக ஏற்கெனவே விலகியுள்ள நிலையில், இறுதியாக 1996ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற மார்ட்டினா ஹிங்கிஸும், ஆரம்ப அணியில் ஆறாவது அங்கத்தவரான டிமியா பச்சென்ஸ்கியுமே அணியில் மீதமாகவுள்ளனர்.

Related posts: