தோனியின் பதவி விலகலுக்கான காரணம் வெளியானது!

Tuesday, January 10th, 2017

தேர்வுக்குழு உத்தரவால் அணித்தலைவர் பதவியில் இருந்து தோனி விலகியதாக வெளியான தகவலால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான வரலாற்று சிறப்புமிக்க தலைவர் மகேந்திரசிங் தோனி, இரண்டு உலகக் கிண்ணத்தை வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்தார். இந்திய கிரிக்கெட்டின் 3 நிலைக்கும் அணித்தலைவராக இருந்த தோனி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது டெஸ்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார்.

இதனால் விராட்கோலி டெஸ்ட் கெப்டனாக நியமிக்கப்பட்டார், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணிக்கு தலைவராக தோனி தொடர்ந்தும் பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சிகரமான முடிவை தோனி எடுத்தார். ஒருநாள் போட்டி, 20 ஓவர் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்றும் அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் அணியில் இடம் பெற்றார். விராட்கோலி 3 நிலைக்கும் கெப்டன் ஆனார். இந்த நிலையில் அணித்தலைவர் பதவியில் இருந்து தோனி விலகியது அவரது சொந்த முடிவு இல்லை என்றும் பதவி விலகுமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என்றும் பரபரப்பான தகவலை இந்திய ஆங்கில பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது

இதை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்ததாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனி தானாக முன் வந்து அணித்தலைவர் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கேட்டுக்கொண்டதன் பேரில் விலகினார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் ஜார்க்கண்ட் – குஜராத் மோதிய அரைஇறுதி ஆட்டம் கடந்த வாரம் நாக்பூரில் நடந்த போது தோனி தனது மாநில அணியை உற்சாகப்படுத்துவதற்காக வீரர்களுடன் இருந்தார்.

அப்போது தேர்வுகுழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் அங்கு சென்று தோனியை சந்தித்தார். அப்போது அணித்தலைவர் பதவி குறித்து அவரிடம் தேர்வு குழு தலைவர் விவாதித்தார். 2019 உலகக் கிண்ணம் நடக்கும் போது தோனிக்கு 39 வயதாகிவிடும். இதனால் விராட் கோலியை அணித்தலை வராக்குவதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே தேர்வு குழு தீவிரம் காட்டி வந்தது.

புதிய தேர்வு குழு கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி பதவியேற்ற போது 2019 உலகக்கிண்ணம் பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டது. டெஸ்டில் மிகவும் சிறப்பாக செயல்படும் விராட் கோலியை ஒருநாள் போட்டிக்கும் கெப்படன் ஆக்கிவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் அவரது ஆக்ரோ‌ஷம் தேர்வு குழுவை கவர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அணித்தலைவர் பதவியால் தோனிக்கு உள்ள நெருக்கடி பற்றியும் இந்த சந்திப்பின் போது பிரசாத் எடுத்து உரைத்தார். இதனால் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று தெரிவித்தார்.

தேர்வு குழு தலைவரின் இந்த உத்தரவால் தான் தோனி அணித்தலைவர் பதவியில் இருந்து விலகினார். இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வீரர்கள் தேர்வுக்கு முன்பு பதவி விலகுமாறு அவரிடம் கேட்டு கொள்ளப்பட்டது. இதனால் அவர் 4 ஆம் திகதியே தனது பதவி விலகல் முடிவை அறிவித்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் தெரிவித்துவிட்டார்.

தோனி தானாக அணித்தலைவர் பதவியை விட்டு செல்லவில்லை. கட்டாயப்படுத்தி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக வெளியான இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் வேதனையையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

ms-dhoni-captain-of-india-during-the-third-royal-london-one-day-series-match-between-england-and-india

Related posts: