தொடரை வென்றது இங்கிலாந்து!
Monday, September 3rd, 2018
இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து 5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, தொடரையும் தன் வசமாக்கியது.
முன்னதாக, இந்த 4-ஆவது டெஸ்டில் 2-ஆவது இன்னிங்ஷஸ ஆடி வந்த இங்கிலாந்து, 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து 245 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஷஸ தொடங்கிய இந்தியா, 69.4 ஓவர்களில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி மட்டும் 58 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இங்கிலாந்தின் செளதாம்டன் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.
அந்த அணி முதல் இன்னிங்ஸில் 76.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் அடித்தது. சாம் கரன் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஷஸ தொடங்கிய இந்தியா, 84.5 ஓவர்களில் 273 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக சேதேஷ்வர் புஜாரா ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் விளாசியிருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் மொயீன் அலி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து 2-ஆவது இன்னிங்ஷஸ தொடங்கி 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 245 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இந்தியாவின் பேட்டிங் வரிசை, ஆரம்பம் முதலே ஆட்டம் காணத் தொடங்கியது. 10 ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ஆடிய கோலி-ரஹானே கூட்டணி சற்று நிலைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
கோலி ஆட்டமிழந்த பிறகு சற்று நிலைத்த ரஹானே, இறுதியில் 51 ரன்களுக்கு வீழ்ந்தார். பின்னர் வந்த விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வெளியேற முடிவுக்கு வந்தது இந்தியாவின் ஆட்டம்.
Related posts:
|
|
|


