தேசிய அளவிலான கார் பந்தயம்- 2ஆவது கட்டம் நிறைவு!

Monday, August 6th, 2018

தேசிய கார் பந்தயங்களுள் ஒன்றான எம்.ஆர்.எஃப். தேசிய கார் பந்தயத் தொடரின் இரண்டாவது கட்டப் போட்டிகள் கோவையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தன. இதில், டீம் மஹிந்திரா அட்வென்ச்சர் அணியின் கௌரவ் கில் – மூசா ஷெரீப் இணை வெற்றி பெற்றுள்ளது.

இதில் முதல் கட்டப் போட்டிகள் சென்னையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது கட்டப் போட்டிகள் கோவையில் சனிக்கிழமை தொடங்கின. முதல் நாள் போட்டியில், போட்டி தொடங்கிய இடத்தில் இருந்து 35 கி.மீ.தொலைவில் உள்ள கேத்தனூர் கார் பந்தய மைதானத்தை வீரர்கள் சென்றடைந்தனர். இதையடுத்து, கேத்தனூர் மைதானத்தில் இரண்டாவது நாள் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இரண்டு நாள் போட்டிகளுக்குமாக மொத்தம் 186 கி.மீ. தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது நாள் போட்டிகளின் முடிவில், ஒட்டுமொத்தப் பிரிவில், டீம் மஹிந்திரா அட்வென்ச்சர் அணியின் கௌரவ் கில் – மூசா ஷெரீப் இணை முதலிடத்தைப் பெற்றது. இவர்கள் நிர்ணயிக்கப்பட்ட பந்தய தூரத்தை 1 மணி நேரம் 14 நிமிடம் 30.1 விநாடி நேரத்தில் கடந்தனர். இதே அணியைச் சேர்ந்த அமித்ரஜித் கோஷ் – அஷ்வின் நாயக் இணை இரண்டாமிடத்தைப் பெற்றனர். இவர்கள் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 15 நிமிடம் 31.2 விநாடி நேரத்தில் கடந்தனர். இவர்களையடுத்து, ஆர்கா மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணியின் கர்ணா கடூர் – நிக்கில் பய் இணை 1 மணி நேரம் 16 நிமிடம் 24.8 விநாடி நேரத்தில் கடந்து மூன்றாமிடத்தைப் பெற்றனர்.

மற்றொரு பிரிவில் கர்ணா கடூர் – நிக்கில் பய் இணை முதலிடத்தையும், ராகுல் காந்தராஜ் – விவேக் பட் இணை இரண்டாவது இடத்தையும், பல்குணா அர்ஸ் – ஸ்ரீகாந்த் கவுடா இணை மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

மூன்றாவது பிரிவில் அரூர் விக்ரம் ராவ் – சோமய்யா இணை முதலிடத்தையும், சுகீம் கபீர் – ஜீவரத்தினம் இணை இரண்டாமிடத்தையும், சேத்தன் சிவராம் – ரூபேஷ் கோலி இணை மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

இரண்டாவது கட்டப் போட்டிகள் கோவையில் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாவது கட்டப் போட்டிகள், கேரள மாநிலம், கொச்சியில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளன. அதைத் தொடர்ந்து, நான்காவது கட்டப் போட்டிகள் பெங்களூருவிலும், 5ஆவது மற்றும் இறுதிக் கட்டப் போட்டிகள் கொல்கத்தாவிலும் நடத்தப்படுகின்றன. 5 கட்டப் போட்டிகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகளைப் பெறுவோரே எம்.ஆர்.எஃப். தேசிய கார் பந்தய சாம்பியன்களாக அறிவிக்கப்படுவர்

Related posts: