தொடருமா ரஷ்யாவின் வெற்றி! – எகிப்து அணியுடன் இன்று மோதல்!

Tuesday, June 19th, 2018

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் ரஷ்யா, எகிப்து அணிகள் மோதுகின்றன. இதில் ரஷ்ய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால், தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்யலாம்.

ரஷ்யாவில், 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், இன்று நடக்கவுள்ள ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், உலக தரவரிசையில் 70வது இடத்தில் உள்ள ரஷ்ய அணி, உலகின் ‘நம்பர் 45’ எகிப்தை எதிர்கொள்கிறது.

சவுதி அரேபியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 5௲0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள ரஷ்ய அணி, சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது சாதகமான விஷயம். இப்போட்டியில் கோலடித்த யுரி காஜின்ஸ்கி, டெனிஸ் செரிஷேவ், ஆர்டம் டிஜியுபா, அலெக்சாண்டர் கோலோவின் மீண்டும் கைகொடுக்கலாம். தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகிய ஆலன், மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது சந்தேகம். இன்று ரஷ்ய அணி வெற்றி பெறும் பட்சத்தில், தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து ‘ரவுண்டு௲16’ சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், முதல் சுற்றோடு திரும்பும் என்ற கணிப்பை தவிடுபொடியாக்கலாம்.

உருகுவே அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த சோகத்தில் எகிப்து அணி உள்ளது. ஆப்ரிக் கோப்பையில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா, காயத்தால் முதல் போட்டியில் விளையாடாதது பின்னடைவு. முழு உடற்தகுதி அடைந்திருப்பதாக கூறப்படும் இவர், இன்று அணிக்கு திரும்பினால் முதல் வெற்றியை பெற்றுத் தரலாம்.

‘பிபா’ உலக கோப்பை மற்றும் ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் ரஷ்யா, எகிப்து அணிகள் முதன்முறையாக மோதவுள்ளன.

மூன்றாவது முறையாக (1934, 1990, 2018) உலக கோப்பையில் விளையாடும் எகிப்து அணி, இதுவரை 5 போட்டியில், 2 ’டிரா’, 3 தோல்வியை பெற்றுள்ளது.

ரஷ்ய அணி, 11வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறது. இதுவரை 41 போட்டியில், 18 வெற்றி, 8 ‘டிரா’, 15 தோல்வியை சந்தித்துள்ளது.

சரான்ஸ்க் நகரில் நடக்கவுள்ள ‘எச்’ பிரிவு லீக் போட்டியில் கொலம்பியா (‘நம்பர் 16’), ஜப்பான் (61வது இடம்) அணிகள் மோதுகின்றன. ‘பிபா’ உலக கோப்பையில் இவ்விரு அணிகள் 2வது முறையாக மோதவுள்ளன.

கடந்த 2014ல் மோதிய போட்டியில் கொலம்பிய அணி, 4-1 என, வெற்றி பெற்றது. ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் கொலம்பியா, 2ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி ‘டிரா’ ஆனது.

மற்றொரு ‘எச்’ பிரிவு லீக் போட்டியில் போலந்து (‘நம்பர் – 8’), செனகல் (27வது இடம்) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கால்பந்து அரங்கில் இவ்விரு அணிகள் மோதுவது முதன்முறை.

Related posts: