தென்னாபிரிக்கா வெற்றி!

Saturday, July 28th, 2018

இலங்கைக்கு வருகைதந்துள்ள தென் ஆபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நாளை 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை கிரிகட் சபையின் பதினொருவர் அணிக்கும் தென் ஆபிரிக்க அணிக்கும் இடையிலான 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டி கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணித்தலைவர் டு ப்ளெஸிஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டி கொக் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து அம்லா, மர்க்ரம் மற்றும் டுமினி ஆகியோரும் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தமை தென் ஆபிரிக்க அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

அணித்தலைவர் டு ப்ளெஸிசின் அனுபவ ஆட்டம் தென் ஆபிரிக்க அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதோடு, மில்லர், ஹென்றிக்ஸ் மற்றும் மல்டர் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் தென் ஆபிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது. இறுதியில் தென் ஆபிரிக்க அணி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 293 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் தென் ஆபிரிக்க அணி சார்பாக டு ப்ளெஸிஸ் 71 ஓட்டங்களையும் ஹென்றிக்ஸ் மற்றும் மல்டர் ஆகியோர் முறையே 59 மற்றும் 56 ஓட்டங்கள் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை கிரிகட் சபை அணி சார்பாக பிரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

294 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிகட் சபையின் பதினொருவர் அணி முதல் ஓவரிலே முதல் விக்கெட்டை இழந்த போதும் இரண்டாவது விக்கெட்டுக்காக திமுத் கருணாரதன மற்றும் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகியோர் சிறப்பாக விளையாடி 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். எனினும் மத்திய வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இறுதியில் 44.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்று ஓட்டங்களால் 63 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இலங்கை கிரிகட் சபையின் பதினொருவர் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பின்வரிசை வீரரான இசுறு உதான அதிக பட்சமாக 53 ஓட்டங்களையும் டெஸ்ட் போட்டித்தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மல்டர் மற்றும் ஷம்ஸி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியதோடு டாலா இரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளிலும் மோசமான முறையில் தோல்வியடைந்த தென் ஆபிரிக்க அணிக்கு இன்றைய பயிற்சி போட்டியில் பெற்ற வெற்றி ஒருநாள் தொடருக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை ஞாயிற்றுக்கிழமை (29) தம்புள்ளையில் இடம் பெறவுள்ளது.

Related posts: