தெண்டுல்கர்-காம்ப்ளி மீண்டும் இணைவு!

Saturday, October 28th, 2017

கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர். இவரும் முன்னாள் வீரருமான வினோத் காம்ப்ளியும் பள்ளி பருவத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். 1988-ம் ஆண்டு பள்ளி கிரிக்கெட்டில் இருவரும் இணைந்து 664 ரன்களை குவித்தனர்.

இதன்மூலம் அணிக்குள் நுழைந்த சச்சின் தெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் ஜொலித்தார். கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் அளவுக்கு மிகவும் உயர்ந்த நிலைக்கு சென்றார். ஆனால் காம்ப்ளியால் சர்வதேச போட்டியில் நிலைத்து நிற்க முடிய வில்லை. அவரது கிரிக்கெட் வாழ்க்கை எளிதில் முடிந்தது.

தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர ஒன்றும் செய்ய வில்லை என்று 2009-ம் ஆண்டு காம்ப்ளி குற்றம் சாட்டினார். இது இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசலை ஏற்படுத்தியது. 2013-ல் தெண்டுல்கர் ஓய்வு பெறும் போட்டிக்கு கூட காம்ப்ளி அழைக்கப்படவில்லை. தனது உரையில் அவரது பெயரை கூட சச்சின் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் மும்பையில் நடந்த ராஜ்தீப்சர்தேசாய் புத்தக அறிமுக நிகழ்ச்சியில் தெண்டுல்கரும், காம்ப்ளியும் இணைந்து நீண்ட இடை வெளிக்கு பிறகு பங்கேற்றனர். இருவரும் தங்களது நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டனர். இதுகுறித்து காம்ப்ளி கூறியதாவது:-

தெண்டுல்கர் என்னுடைய நகைச்சுவைகளை இழந்து இருப்பார். நான் சில ஜோக்குகள் சொல்லும் போது அவர் எப்போதும் போல் சிரித்தார்.

நாங்கள் இருவரும் அனைத்தையும் மறந்து விட்டோம். வேற்றுமைகளை நானும் மறந்தேன். சச்சினும் மறந்தார். கடவுளின் கிருபையால் எங்கள் நட்பில் புதிய உதயம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் நேரில் சந்தித்தபோது தர்மசங்கடம் இல்லை. சச்சின் ஒரு நபராக இன்னும் மாறவில்லை. அதே குணம் தான் இருக்கிறது. ஆனால் இன்னும் வலுவாகவும், நல்லவராகவும் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts: