தரங்க அபார சதம்: சம்பியனானது காலி!

Saturday, June 16th, 2018

உபுல் தரங்கவின் அதிரடி சதத்தின் மூலம் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணியை 75 ஓட்டங்களால் வீழ்த்தி காலி அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் நான்கு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதிப் போட்டி மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் ஒத்திவைக்கப்பட்டு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த காலி அணித் தலைவர் உபுல் தரங்க ரமித் ரம்புக்வெல்லவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

எனினும் ரம்புக்வெல்லவை இடதுகை சுழல் பந்து வீச்சாளர் லக்ஷான் சந்தகன் 22 ஓட்டங்களுடன் வெளியேற்றினார்.

இந்நிலையில் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த தரங்க மற்றும் விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரம 125 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதன்போது சமரவிக்ரம 71 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 19 வயது வீரர் கமிந்து மெண்டிஸின் பந்துக்கு போல்டானார்.

எனினும் மறுமுனையில் உபுல் தரங்க 122 பந்துகளில் 13 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 124 ஓட்டங்களைக் குவித்தார்.

தரங்க இந்த தொடரில் ஆறு போட்டிகளிலும் இரண்டு சதங்கள் மற்றும் 2 அரைச் சதங்களுடன் 396 ஓட்டங்களை பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலி அணியின் மத்திய வரிசை வீரர்களான தசுன் ஷானக்க (31) சதுரங்க டி சில்வா (26) மற்றும் பானுக்க ராஜபக்ஷ (29) ஸ்திரமாக ஓட்டங்களை பெற்றனர்.

இதன் மூலம் காலி அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 320 ஓட்டங்களை குவித்தது. இதன் போது கொழும் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய லக்ஷான் சந்தகன் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு அணி முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் தேவையான ஓட்ட வேகத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லசித் அபேரத்ன 2 ஓட்டங்களுடன் வெளியேறிய நிலையில் 2 ஆவது விக்கெட்டுக்காக ஷெஹான் ஜயசூரிய மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 56 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

எனினும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணி வீரரான கமிந்து மெண்டிஸ் 41 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்ததோடு அரைச்சதத்தை எட்டிய ஷெஹான் ஜனசூரிய 40 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்று வெளியேறினார்.

அடுத்து வந்த அனுபவ வீரர் சாமர சில்வாவால் 9 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. அதேபோன்று தேசிய அணி வீரரான லஹிரு திரிமான்ன (17) அணித் தலைவர் திசர பெரேரா (26) ஆகியோரும் கைகொடுக்க தவறினார்.

இறுதியில் கொழும்பு அணி 44.2 ஓவர்களில் 245 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

காலி அணிக்காக பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த நிஷான் பீரிஸ் மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பு சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் 31 வயதுடைய மலிந்த புஷ்பகுமார இந்த தொடரில் 6 போட்டிகளிலும் மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் தொடரில் பங்குபற்றிய ஏனைய இரண்டு அணிகளான அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான கண்டி அணி மற்றும் குசல் பெரேரா தலைமையிலான தம்புள்ளை அணிகள் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறின.

Related posts: