டென்னிஸ் சாம்பிய: கெர்பர், சிபுல்கோவா அரைஇறுதிக்கு தகுதி!

Saturday, October 29th, 2016

சிங்கப்பூரில் நடந்து வரும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கெர்பர், சிபுல்கோவா அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள சர்வதேச பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ரெட்’ பிரிவில் நேற்று கடைசி லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன் புயல்’ ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் மேடிசன் கீஸ்சை (அமெரிக்கா) வீழ்த்தினார். முன்னதாக மற்றொரு ஆட்டத்தில் டொமினிகா சிபுல்கோவா (சுலோவக்கியா) 6-3, 7-6 (5) என்ற நேர் செட்டில் சிமோனா ஹாலெப்புக்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்தார்.

தான் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்த ஏஞ்சலிக் கெர்பர், ‘ரெட்’ பிரிவில் முதலிடத்தை பிடித்து கம்பீரமாக அரைஇறுதிக்குள் நுழைந்திருக்கிறார். சிபுல்கோவா, மேடிசன் கீஸ், ஹாலெப் தலா ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலை வகித்தனர்.

இதையடுத்து வென்ற, விட்டுக்கொடுத்த செட்டுகளின் அடிப்படையில் மற்ற இருவரையும் ஓரங்கட்டிய சிபுல்கோவா(3 செட் வெற்றி, 4 செட் இழப்பு) அரைஇறுதி வாய்ப்பை தட்டிச் சென்றார். ஹாலெப், கீஸ் 2 செட்டுகளை வென்று, 4 செட்டுகளை பறிகொடுத்திருக்கிறார்கள். கெர்பர் தனது கடைசி லீக்கில் நேர் செட்டில் வென்றதாலேயே சிபுல்கோவாவுக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் கிட்டியது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சம்பியன் ராட்வன்ஸ்கா, பிளிஸ்கோவா தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளனர். எனவே இவர்கள் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் ‘வையிட்’ பிரிவில் இருந்து 2-வது வீராங்கனையாக அரைஇறுதிக்கு தேர்வு செய்யப்படுவர்.

89col111309955_4938948_28102016_1

Related posts: