டி20 உலகக்கிண்ணம்: வங்கதேசத்தை வென்றது நியூசிலாந்து!

Sunday, March 27th, 2016

வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண டி20 போட்டியில் நியூசிலாந்து 75 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி வங்கதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் பந்தில் திணற ஆரம்பித்தது.  இதனால் வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. வில்லியம்சன் (42), முன்ரோ (35), ரோஸ் டெய்லர் (28) ஆகியோர் மட்டும் இரட்டை இலக்கை ஓட்டங்கள் எடுத்தனர்.

மற்ற அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ஓட்டங்கள் எடுத்தது. வங்கதேச அணி சார்பில், வேகத்தில் மிரட்டிய முஸ்தாபிஜூர் ரகுமான் 5 விக்கெட்டுகளையும், அல்-அமின் ஹொசன் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

146 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வங்கதேச அணி நிதான ஆட்டத்தை தொடங்கியது. ஆனால் நியூசிலாந்தின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் வங்கதேச வீரர்கள் வரிசையாக வெளியேற, அந்த அணி 15.4 ஓவரிலே 70 ஓட்டங்களுக்கு சுருண்டு 75 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

வங்கதேச அணி சார்பில் சுவகாட்ட மட்டுமே அதிகபட்சமாக 16 ஓட்டங்கள் எடுத்தார். சபீர் ரஹ்மான் 12 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில், எலியாட், இஷ் சோதி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

 

Related posts: