சொந்த கிரிக்கெட் வாரியத்தை விட இந்திய கிரிக்கெட் வாரியம் நல்லது : பிராவோ

Wednesday, April 6th, 2016

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமியைப் போல் வெய்ன் பிராவோவும் சொந்த கிரிக்கெட் வாரியத்தை தாக்கி கருத்துத் தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டேரன் சமி, தங்களை சொந்த கிரிக்கெட் வாரியமே மதிக்கவில்லை என்றும், பல்வேறு பிரச்சனைகளை தாண்டியே நாங்கள் சாதித்துள்ளோம் என்று வெளிப்படையாக பேசினார். இந்நிலையில் அந்த அணியின் சகலதுறை வீரரான வெய்ன் பிராவோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”:எங்கள் நாட்டு கிரிக்கெட் சரியானவர்களிடம் இல்லை.

எங்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், இயக்குனர்களிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை. அவர்கள் எங்களை பாராட்டவே இல்லை. இது சிறந்த விடயம் கிடையாது. நாங்கள் இந்த கிண்ணத்தை வெல்வோம் என்று அவர்கள் நம்பவே இல்லை. அடிப்படையில் இது வீரர்களுக்கும் வாரியத்துக்கும் இடையிலான மோதல்.

எங்கள் அட்டவணையை பார்த்தால், இந்த வருடம் எங்கள் நாட்டுக்கு வேறெந்த டி20 போட்டியும் திட்டமிடப்படவில்லை. நான், கெயில், ரஸல் யாரும் ஒருநாள் போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் இருக்கிறது. ஆனால் நாங்கள் அந்த நேரத்தில் இங்கிலாந்து டி20 லீக்கில் விளையாடிக் கொண்டிருப்போம்.

அதேசமயம் எங்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் அன்பைப் பாருங்கள். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தை விட, பி.சி.சி.ஐ தான் எங்களுக்கு அதிக ஆதரவு அளித்தது” என்று கூறியுள்ளார்.

Related posts: