சுவீடனும் காலிறுத்திக்கு முன்னேற்றம்!

Wednesday, July 4th, 2018

உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன். ‘ரவுண்டு–16’ போட்டியில் சுவிட்சர்லாந்தை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ரஷ்யாவில் 21வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘ரவுண்டு–16’ போட்டியில் உலகத் தரவரிசையில் 6வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து, 24வது இடத்தில் உள்ள சுவீடனை எதிர்கொண்டது. போட்டியின் 8வது நிமிடம் சுவீடன் அணி கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனிநபராக பந்தை கொண்டு சென்ற பெர்க், கோல் போஸ்டுக்கு அருகே சென்று பந்தை வெளியே அடித்து வீணடித்தார். அடுத்த நிமிடம் சுவீடன் வீரர் ஏக்தல், தன் பங்கிற்கு பந்தை கோல் போஸ்ட் மேலாக அடித்து ஏமாற்றினார்.

ஆட்டத்தின் 28வது நிமிடம் சுவீடனின் போர்ஸ்பெர்க்கிடம் இருந்து வாங்கிய பந்தை கோலாக மாற்ற முயன்றார் ஏக்தல். இந்த பந்தை கோல் கீப்பர் சோம்மர் (சுவிட்சர்லாந்து) எளிதாக தடுக்க மீண்டும் சுவீடன் கோல் வாய்ப்பு நழுவியது. சுவிட்சர்லாந்து தரப்பில் 36 மீ., துாரத்தில் இருந்து கிராண்ட் ஜக்கா அடித்தது, 38வது நிமிடம் அகன்ஜி அடித்தது, சுவீடன் கோல் போஸ்ட் மேலாக சென்றன. இந்நிலையில் சுவீடனின் லஸ்டிக் கொடுத்த ‘பாசை’ பெற்ற ஏக்டல், மறுபடியும் போஸ்டுக்கு வெளியே அனுப்பி ரசிகர்களை வெறுப்பேற்றினார். முதல் பாதி கோல் எதுவுமில்லாமல் முடிந்தது.

கடந்த 3 போட்டிகளில் முதல் பாதி சமமாக இருந்த போட்டிகளில் சுவீடன் வென்றதால், வீரர்கள் நம்பிக்கையுடன் போராடினர். இதற்கு 66வது நிமிடம் நல்ல பலன் கிடைத்தது. சுவீடனின் போர்ஸ்பெர்க் அடித்த பந்து, சுவிட்சர்லாந்தின் மானுயல் அகன்ஜி வலது காலில் பட்டு விலகிகோலாக மாறியது. இரண்டாவது பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+3வது) லாங், சுவீடன் ஆல்ஸ்சனை ‘பவுல்’ செய்து ‘ரெட் கார்டு’ பெற்றார். அப்போது நடுவர் கொடுத்த ‘பெனால்டி’, ‘வார்’ முறையில் ‘ரீப்ளே’ பார்க்கப்பட்டு ‘பிரீ கிக்’ ஆக மாற்றப்பட்டது. முடிவில் சுவீடன் அணி 1–0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. கடந்த 1954க்குப் பின் உலக கோப்பை தொடரின் ‘நாக் அவுட்’ சுற்றில் ஒரு கோல் கூட அடிக்காத சுவிட்சர்லாந்து, நேற்றும் ஏமாற்ற சோகத்துடன் வெளியேறியது.

உலக கோப்பை தொடரில் 1958, காலிறுதியில் சுவீடன் அணி, ரஷ்யாவை 2–0 என வென்றது. அரையிறுதியில் மேற்கு ஜெர்மனியிடம் 1–3 என தோற்றது. அன்று முதல் உலக கோப்பை தொடரில் சுவீடன் அணி அடுத்தடுத்த போட்டிகளில் வென்றது இல்லை. இம்முறை லீக் சுற்றில் மெக்சிகோவை 3–0 என வென்றது சுவீடன், நேற்று சுவிட்சர்லாந்தை வீழ்த்தி சாதித்தது.

உலக கோப்பை தொடரில் ஆறாவது முறையாக (1934, 1938, 1950, 1958, 1994, 2018) காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன்.

Related posts: