சீருடைக்கே சிரமப்பட்டாலும் லட்சங்களை அள்ளிக் கொடுத்து உதவிய சாம்பியன்!

Wednesday, April 6th, 2016

டி20 உலகக்கிண்ண தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி செய்துள்ள காரியம் ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகளால் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதன் மூலம் பல விமர்சனங்களுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் மூலம் பதிலடி கொடுத்தது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு அந்த அணியின் தலைவர் டேரன் சமி, தாங்கள் சீருடைக்கே சிரமப்பட்டதாகவும், சொந்த கிரிக்கெட் வாரியமே தங்களை மதிக்கவில்லை என்றும் வெளிப்படையாக பேசினார்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் வீரர்களும், அணி நிர்வாகத்தினரும் கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரேசா தொண்டு நிறுவனத்திற்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் மேனேஜர் ரால் லூயிஸ் அன்னை தெரேசா தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக சென்று குறிப்பிட்ட தொகையை நிதியுதவியாக அளித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்த உதவும் மனப்பான்மை திறமையைத் தாண்டி அவர்களை உண்மையான சாம்பியனாகவே காட்டுகிறது

Related posts: