சாம்பியன் தொடர்: வீழ்ந்தது இலங்கை!

Sunday, June 4th, 2017

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன் டிராபி தொடரில் தென் ஆப்பிரிக்கா வீரர் இம்ரான் தாகிரின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல், 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இலங்கை அணி.

சாம்பியன்ஸ் டிராபி திருவிழாவில், லண்டனில் இன்று நடைபெறும் 3-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இலங்கையும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின.

நம்பர் ஒன் அணியான தென்ஆப்பிரிக்கா டிவில்லியர்ஸ் தலைமையில் களம் இறங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

தென் ஆப்ரிக்க அணியின் துவக்க வீரர்களாக ஹசீம் அம்லா மற்றும் குவின் டி காக் ஆகியோர் களமிறங்கினார். இலங்கை வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடித்து ஆடிய ஹசீம் ஆம்லா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

44 ஓட்டங்களில் இந்த ஜோடி பிரிந்தது. 23 ஓட்டங்கள் எடுத்த குவின் டி காக் பிரதீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் டூ பிளிசிஸ், அம்லாவுடன் இணைந்து ஓட்டங்களை குவித்தார். 75 ஓட்டங்களை எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய தலைவர் டி வில்லியர்ஸ் வெறும் 4 ஓட்டங்களில் வெளியேறினார். ஆட்டத்தின் 41 வது ஓவரில் 115 பந்துகளில் அம்லா சதமடித்து அசத்தினார்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் டுமினி 38 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இலங்கை அணி சார்பில் பிரதீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 300 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக டிக்வெல்லா மற்றும் உபுல் தரங்கா களமிறங்கினர்.

துவக்க வீரர்களான இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 69 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பிரிந்தது.

டிக்வெல்லா 41 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.

அடுத்து வந்த வீரர்கள் மெண்டிஸ்(11), சண்டிமல்(12), கபுகேத்ரா(0) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த இலங்கை அணியின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இருந்த போதும் மற்றோரு துவக்க வீரரான தரங்கா தன் பங்கிற்கு சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில் இம்ரான் தாகிர் பந்து வீச்சில் அரைசதம் கடந்து 57 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பெளலியன் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொதப்ப, இறுதியாக இலங்கை அணி 41.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்கள் எடுத்து, 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக உபுல் தரங்கா 57 ஓட்டங்களும், குசல் பெரேரா 44 ஓட்டங்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Related posts: