சாமுவேல்சுக்கு அபராதம்

Wednesday, April 6th, 2016
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆட்டம் இழக்காமல் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ், இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு சாமுவேல்ஸ், 2013–ம் ஆண்டு பிக்பாஷ் போட்டியில் தன்னுடன் தகராறில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், வர்ணனையாளருமான ஷேன் வார்னே மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை வார்த்தைகளால் சாடினார்.
சாமுவேல்ஸ் கூறுகையில்,
‘கடந்த ஜனவரி மாதத்தில் நான் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடினேன். அப்போது வார்னே என்னுடன் பிரச்சினையில் ஈடுபட்டார். அவர் ஏன் என்னுடன் தொடர்ச்சியாக பிரச்சினை செய்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. நான் ஒருபோதும் அவரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதில்லை. அவருடைய உள் மனதில் என்னை பற்றி உள்ள விஷயங்களை வெளியில் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளதாக நான் கருதுகிறேன். அவர் தொடர்ந்து என்னை பற்றி பேசி வரும் விதமும் அவர் செய்து வரும் காரியங்களும் எனக்கு அறவே பிடிக்கவில்லை. என்னுடைய முகம் நிஜமானது. அவருடைய முகம் நிஜமற்றது என்பதால் கூட இப்படி நடக்கலாம். அவரது செயலுக்கு நான் மைக் மூலம் பதில் சொல்ல விரும்பவில்லை. எனது பேட் மூலம் பதில் அளிக்க விரும்பினேன். எனது விருது ஷேன் வார்னுக்கு’ என்றார்.
மேலும் சாமுவேல்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘ஸ்டோக்ஸ் பதற்றமானவர் எனவே கடைசி ஓவருக்கு முன்பு பிராத்வெய்ட்டிடம் உறுதியுடன் விளையாடுமாறு கூறினேன். எப்படி இருந்தாலும் அவர் இரண்டு புல்டாஸ்களை வீசுவார். அது எப்போதும் போல் நமக்கு சாதகமாக முடியும் என்றேன். ஸ்டோக்ஸ் எதையும் கற்றுக்கொள்வதில்லை. எனக்கு எதிராக விளையாடும் போது என்னிடம் பேசவேண்டாம் என்று அவரிடம் சொல்லி இருக்கிறேன். ஆனால் அதனை கேட்காமல் நான் பந்தை எதிர்கொள்ளும் முன்பே என்னை வார்த்தைகளால் சீண்டினார். இதனால் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி ஒரு கை பார்ப்பது என்று முடிவு செய்தேன். இத்தகைய செயல்களால் தான் இன்னமும் நீடிக்கிறேன். எதிரணியினர் உசுப்பேற்றுவது தான் நான் நீண்ட காலம் தொடர்ந்து ஆடுவதற்கு காரணம்’ என்று கூறினார்.
பென் ஸ்டோக்சுடன் வார்த்தை யுத்தம் மற்றும் வெற்றி பெற்றதும் இங்கிலாந்து அணியினரை நோக்கி சைகை காட்டியது ஆகிய காரணங்களுக்காக சாமுவேல்சுக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Related posts: