சானை நாயகன் மக்ஸ்வெல்!

Thursday, September 8th, 2016

அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல், அதிரடியான – பல நேரங்களில் பொறுப்பற்றுவிளையாடும் – துடுப்பாட்ட வீரராக இருந்தாலும், சமூக ஊடக வலையமைப்புகளிலும் ஊடகங்களுடனான சந்திப்புகளிலும், நகைச்சுவையாகவும் எளிமையாகவும் பேசக்கூடிய ஒருவராவார்.

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியில், அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரொன் பின்ச், 18 பந்துகளில் அரைச்சதத்தைப் பெற்று, அவுஸ்திரேலியா சார்பாக பெறப்பட்ட வேகமான அரைச்சதம் என்ற சாதனையைச் சமப்படுத்தினார். அச்சாதனைக்கு சைமன் ஓ டொனல், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் இதற்கு முன்னர் சொந்தக்காரர்களாக இருந்திருந்தனர்.

அந்த இனிங்ஸின் பின்னர் கருத்துத் தெரிவித்த பின்ச், “மக்ஸ்வெல்லை முந்தாமை குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன்” என, நகைச்சுவையாகத் தெரிவித்தார். அந்தக் காணொளியை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் காணொளிகளுக்கான பிரிவு, டுவிட்டரில் பகிர்ந்து, அது தொடர்பாகக் கருத்து என்னவெனக் கேட்க, “(30 யார்) வட்டத்துக்கு வெளியே இரண்டு பேர் மாத்திரம் வெளியே இருக்கும் முதல் 10 ஓவர்களில், இதைச் செய்வதற்குக் கடினமாக இருக்காது, இல்லையா?” என, நகைச்சுவையாகக் கேட்டார்.

அதே பின்ச், காயம் காரணமாக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றமுடியாது போக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினார் மக்ஸ்வெல். இறங்கியவர், 27 பந்துகளில் அரைச்சதத்தைப் பூர்த்திசெய்ததோடு, 49 பந்துகளில் சததத்தைப் பூர்த்திசெய்தார்.

இதில், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் உலக சாதனையான தனிநபர் ஓட்டங்களான ஆரொன் பின்ச்சின் 156 ஓட்டங்களைக் கடப்பதற்கு மக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு இருந்த போதிலும், அவுஸ்திரேலிய இனிங்ஸில் இறுதி 17 பந்துகளில் 5 பந்துகளை மாத்திரமே, மக்ஸ்வெல் சந்திக்கக்கூடியதாக அமைந்தது.

காயம் காரணமமாக விளையாடாத பின்ச், அணி தங்குமிடத்தில் இருந்து, மக்ஸ்வெல் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியதை ஊக்குவித்துக் கொண்டிருந்ததோடு, அவரது சாதனையை மக்ஸ்வெல் உடைக்கும் நிலைமை காணப்பட்டபோது, அவரின் முகத்தை, தொலைக்காட்சிக் கமெராக்கள், அடிக்கடி காண்பித்துக் கொண்டிருந்தன.

போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த மக்ஸ்வெல், இருபதுக்கு-20 போட்டிகளில், முன்வரிசையில் களமிறங்குவதை விரும்புவதாகத் தெரிவித்த மக்ஸ்வெல், முன்வரிசையில் அதிக சுதந்திரம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மக்ஸ்வெல் துடுப்பெடுத்தாடிவிட்டு வெளியேவரும் போது, மைதானத்தின் ஓரத்தில் வைத்து, அவரைக் கட்டியணைத்து வரவேற்கும் புகைப்படத்தை, பின்ச், தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அவரது இனிங்ஸைப் பாராட்டினார். அதற்குப் பதிலளித்த மக்ஸ்வெல், “சாதனையை முறியடிக்காமை குறித்து மிகவும் வருந்துகிறேன்” என, நகைச்சுவையாகத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த பின்ச், “துரதிர்ஷ்டம். அடுத்த முறை பார்க்கலாம்” என்றார்.

இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி, நாளைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில், அந்தப் போட்டியிலும் பின்ச் பங்குபற்ற மாட்டார். ஆகவே, பின்ச்சின் சாதனையை நோக்கிச் செல்வதற்கு, மக்ஸ்வெல்லுக்கு இன்னுமொரு வாய்ப்புள்ளது. சாதிப்பாரா மக்ஸ்வெல்?

1473183659Main142amdCitySports2

Related posts: