சாதனைகள் பதியப்பட்ட மேற்கிந்தியத்தீவுகள் – இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி!

Monday, August 29th, 2016

அமெரிக்காவில் இடம்பெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஓட்ட மழை பொழிய இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் 1 ஓட்டத்தினால் இந்திய அணியை வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். எனினும் பிளே என்று நடுவர் கூறத் தொடங்கியவுடனேயே ஓட்ட மழையில் மைதானம் நனைய அந்த அணி 20 ஓவர்களில் 245 ஓட்டங்கள் பெற்றது. இந்த ஓட்டங்களே மேற்கிந்தியத்தீவுகள் டி20 போட்டிகளில் பெற்றுக்கொண்ட அதிககூடிய ஓட்டங்களாகும்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ஓட்டங்களைக் குவித்து 1 ஓட்டத்தினால் துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்தது.அமெரிக்காவிற்கு டி20 கிரிக்கெட்டை அறிமுகப்படுத்துவதற்கு இந்தத் தொடரின் முதல் போட்டி அமெரிக்காவில் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் மொத்தமாக 489 ஓட்டங்கள் விளாசப்பட்டன். இது மற்றுமொரு சாதனையாகும் டி20 போட்டியொன்றில் விளாசப்பட்ட அதிககூடடிய மொத்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.இந்தியாவுக்கு 12 பந்துகளில் 24 ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. 19 ஆவது ஓவரில் 16 ஓட்டங்கள் பெறப்படவே கடைசி ஓவரில் வெற்றிக்குக் 8 ஓட்டங்களே தேவைப்பட்டன.

கடைசி ஓவரை அனுபவமிக்க பிராவோ வீச முதல் பந்தில் தோனி சுழற்ற மர்லன் சாமுவேல்ஸ் மிக மிக எளிதான கேட்சைக் கோட்டைவிட்டார். ஆனால் தோனி 1 ஓட்டமெடுக்க அடுத்த பந்தை ராகுல் எதிர் கொண்டார். அடுத்த 3 பந்துகளிலும் ஒற்றை ஓட்டங்களே எடுக்கப்பட்டன.

இறுதிப்பந்தில் இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட ஆனால் பிராவோ வீசிய பந்தை தோனி அடித்தாட அப்பந்து பிடியெடுக்கப்படவே இந்தியாவின் சாதனை வெற்றிக்கான கனவு தகர்ந்தது. 51 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்களுடன் ராகுல் 110 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மே.இ.தீவுகள் சார்பில் சார்லஸ், லூயிஸ் ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்காக 9.3 ஓவர்களில் 126 ஓட்டங்களைக் குவித்தனர். சார்லஸ் 6 நான்கு ஓட்டங்கள் மற்றும் 7 ஆறு ஓட்டங்கள் அடங்கவாக 33 பந்துகளில் 79 ஓட்டங்களை குவித்தார்.

தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய லூயிஸ் 49 பந்துகளில் 100 ஓட்டங்களை குவித்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிய போது ஸ்டூவர்ட் பின்னி வீசிய 11-வது ஓவரில் 5 சிக்சர்களுடன் 32 ஓட்டங்கள் விளாசப்பட்டது. ஆட்ட நாயகனாக லூயிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Related posts: