குசல் பெரேரா போராட்டம்: இலங்கை அணி அபார வெற்றி!

Sunday, February 17th, 2019

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி குசல் ஜனித் பெரேராவின் போராட்ட சதத்தோடு ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளதோடு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

இதேநேரம், இப்போட்டி வெற்றி மூலம் தென்னாபிரிக்க மண்ணில் தமது இரண்டாவது டெஸ்ட் வெற்றியினை பெற்றிருக்கும் இலங்கை அணி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் இருந்து அடைந்து வந்த தொடர்ச்சியான தோல்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது.

கடந்த புதன்கிழமை (13) டர்பன் நகரில் ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணி தமது முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களை குவித்திருந்தது. எனினும், பதிலுக்கு ஆடிய இலங்கை வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களையே பெற்றனர்.

இதனால், இலங்கை அணியை விட 44 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக்கொண்ட தென்னாபிரிக்க அணி தமது இரண்டாம் இன்னிங்ஸை 259 ஓட்டங்களுடன் நிறைவு செய்த பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 304 ஓட்டங்களை நிர்ணயம் செய்தது.

இந்த வெற்றி இலக்கினை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாட தொடங்கிய இலங்கை அணியினர் நேற்றைய போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர். களத்தில் ஆட்டமிழக்காமல் நின்ற அறிமுக வீரர் ஓஷத பெர்னாந்து 28 ஓட்டங்களையும், குசல் பெரேரா 12 ஓட்டங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இன்று (16) போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் வெற்றி பெற இன்னும் 221 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்தது.

போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக ஒசத பெர்னாந்து ௲ குசல் பெரேரா ஜோடி அரைச்சத இணைப்பாட்டம் (58) ஒன்றை பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை காட்டியது.

எனினும், தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் ஓஷத பெர்னாந்துவின் விக்கெட்டினை கைப்பற்றி இலங்கை அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். ஸ்டெய்னின் பந்துவீச்சில் ஸ்லிப் களத்தடுப்பாளராக இருந்த தென்னாபிரிக்க அணித்தலைவர் டூ பிளேசிஸிடம் பிடிகொடுத்த ஓஷத பெர்னாந்து 37 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

ஓஷத பெர்னாந்துவினை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த நிரோஷன் திக்வெல்லவின் விக்கெட்டும் உடனடியாக டேல் ஸ்டெயினின் பந்துவீச்சில் பறிபோனது. தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தை டேல் ஸ்டெய்னிடமே பிடிகொடுத்த திக்வெல்ல ஓட்டம் ஏதுமின்றி மைதானத்தினை விட்டு நடந்தார்.

திக்வெல்லவின் விக்கெட்டினால், இலங்கை அணி ஒரு கட்டத்தில் 110 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாற்றமான நிலை ஒன்றுக்கு சென்றிருந்தது.

இந்நிலையில், இப்போட்டியில் இரண்டாவது அரைச்சதம் பெற்ற குசல் பெரேராவுடன் சேர்ந்து புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த தனன்ஞய டி சில்வா நிதானமான முறையில் துடுப்பாடி, நான்காம் நாளுக்கான மதிய போசண இடைவேளை வரை நல்ல இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க முயற்சி செய்தார்.

மதிய போசண இடைவேளையை அடுத்து தனன்ஞய டி சில்வாவின் முயற்சி வெற்றியளிக்க இலங்கையின் ஆறாவது விக்கெட்டுக்காக 96 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டிருந்தது.

ஆறாம் விக்கெட் இணைப்பாட்டம் போட்டியின் வெற்றி இலக்கை இலங்கை அணி நெருங்க உறுதுணையாக அமைந்து வந்த தருணத்தில் தென்னாபிரிக்க அணியின் சுழல் வீரர் கேசவ் மஹராஜ் தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டினை கைப்பற்றினார். LBW முறையில் ஆட்டமிழந்த தனன்ஞய டி சில்வா 48 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு அரைச்சதம் பெறாமல் வெளியேறினார்.

தனன்ஞய டி சில்வாவை அடுத்து இலங்கை அணி தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களால் இன்னும் மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இதனால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 226 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து போட்டியில் தோல்வியடையும் நிலைக்குச் சென்றது.

இவ்வாறான மிகவும் இக்கட்டான தருணத்தில் இலங்கை அணிக்காக களத்தில் நின்ற குசல் பெரேரா, இலங்கை அணியின் இறுதி துடுப்பாட்ட வீரர் விஷ்வ பெர்னாந்துவுடன் இணைந்து போராட்டத்தை தொடங்கினார்.

தனக்கு கிடைத்த வாய்ப்புக்களில் எல்லாம் ஓட்டங்கள் குவித்த குசல் பெரேரா தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற இரண்டாவது சதத்தையும் பதிவு செய்தார். குசல் பெரேரா பெற்ற இந்த சதத்தின் காரணமாக போட்டி மிகவும் விறுவிறுப்பாக மாறியது.

அதேவேளை விஷ்வ பெர்னாந்துவும் தனது விக்கெட்டினை பறிகொடுக்காமல் குசல் பெரேராவுக்கு ஒத்தாசையாக இருக்க, இலங்கை அணியின் கடைசி விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த இணைப்பாட்டத்தினால் இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கினை 85.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றிக்கு போராட்ட சதம் ஒன்றுடன் பங்களிப்புச் செய்த குசல் பெரேரா மொத்தமாக 200 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 12 பெளண்டரிகள் அடங்கலாக 153 ஓட்டங்கள் குவித்து டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த இன்னிங்ஸை பதிவு செய்திருந்தார்.

மேலும் குசல் பெரேரா இலங்கை அணியின் கடைசி விக்கெட்டுக்காக விஷ்வ பெர்னாந்துவுடன் இணைந்து பகிர்ந்த இணைப்பாட்டம் (78) டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியொன்று கடைசி விக்கெட்டுக்காக பெற்ற அதி கூடிய இணைப்பாட்டமாகும்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் கேசவ் மஹராஜ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், டேல் ஸ்டெய்ன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் இலங்கை அணியின் வெற்றியை தடுக்க போராடிய போதிலும் போதும் அவர்களது முயற்சி வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகன் விருது இலங்கை அணிக்காக முழுமையான போராட்டத்தை வெளிப்படுத்திய குசல் பெரேராவிற்கு வழங்கப்பட்டது.

இப்போட்டியின் வெற்றியோடு தமது தென்னாபிரிக்க சுற்றுத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி அடுத்ததாக போர்ட் எலிசபெத் நகரில் இடம்பெறும் இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கின்றது.

Related posts: