கிரிக்கெட் அணி தொடர்பில் விசாரணை!

Friday, August 25th, 2017

இலங்கை கிரிக்கெட் சம்பந்தமாகக் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக, விசாரணைகள் நடத்தப்படவுள்ளன என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அறிவித்துள்ளார்.

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, நேற்று மதியம் 2.30க்கு ஆரம்பித்த நிலையில், நேற்றுக் காலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியானது.

தொடர்ச்சியாகக் கிடைக்கும் மோசமான தோல்விகள்,  நிர்வாக மட்டத்தில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்ற கோரிக்கைகள் ஆகியவற்றுக்கு மத்தியிலேயே, இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக, முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள், விளையாட்டு நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த நிபுணர்கள் அனைவரையும் ஒரே மன்றத்தில் அமைந்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் எதிர்பார்க்கிறேன். ஆழமான ஆராய்ச்சிகள் இன்றி, நிர்வாகிகள் மீதோ அல்லது வீரர்கள் மீதோ குற்றஞ்சுமத்துவதில் பயனில்லை.

“குற்றத்தைச் சுமத்துவது எண்ணம் கிடையாது, மாறாக, பிரச்சினைகளைத் தீர்த்து, தேசிய அணியின் பின்னால் ஒன்றுசேர்வதே எண்ணமாகும்” என்று குறிப்பிட்டார்.

எழுத்துமூலமான சமர்ப்பிப்புகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ள அவர், இதற்கான மன்றம், 2 வாரங்களுக்குள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தைக் கலைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, அமைச்சர் ஜயசேகர நிராகரித்தார். இந்தக் கோரிக்கையை, உலகக் கிண்ணத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்த தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, நீண்டகாலமாகக் கோரி வருகிறார்.

“நிர்வாகத்தில் தலையிடுவதற்கு நான் விரும்பவில்லை. அது, சர்வதேச கிரிக்கெட் சபையால் தனிமைப்படுத்தப்படும் நிலையை ஏற்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம், கடந்த பல ஆண்டுகளாக, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபைகளாலேயே நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டில், ஜனநாயக ரீதியான தேர்தல் நடத்தப்பட்டது. அதில் போட்டியிட்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான குழுவால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, வீரர்களின் உடற்றகுதியும் பிரச்சினையாக உள்ளதாக, அமைச்சர் ஜயசேகர தெரிவித்துள்ளார். இது, இலங்கை அணியின் மோசமான பெறுபேறுகளுக்குப் பங்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, இலங்கை வீரர்களின் உடற்றகுதி தொடர்பாகவும் அவர்களின் தொப்பை தொடர்பாகவும் அமைச்சர் தெரிவித்த கருத்து, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, மீண்டும் அதே கருத்தை, அவர் வெளியிட்டுள்ளார்.

Related posts: