கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு 21 மாதம் சிறைத் தண்டனை!

Thursday, May 25th, 2017

 

வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸிக்கு 21 மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினாவை சேர்ந்த புகழ்ப்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்ஸியின் புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்ள உருகுவே,ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு மெஸ்ஸி அனுமதி அளித்திருந்தார்.

இதன் மூலம், தனக்குக் கிடைத்த வருவாய்க்கு லயோனல் மெஸ்ஸி, வரி செலுத்தவில்லை என ஸ்பெயின் நிதித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். அதில், 2006 முதல் 2009 வரை மெஸ்ஸியும், அவரின் தந்தை ஜோர்ஜ் காரிசியோவும் சுமார் 40 லட்சம் டொலர் அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குறித்த இந்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு மெஸ்ஸியும் அவரின் தந்தை ஜோர்ஜும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இருவருக்கும் 21 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு செய்தனர். தன்னுடைய அனைத்து கணக்கு வழக்குகளையும், தன்னுடைய தந்தை தான் கவனித்து வருவதாகவும், விளையாட்டை தவிர வேறு எதிலும் தான் கவனம் செலுத்தவில்லை எனவும் நீதிமன்றத்தில் மெஸ்ஸி, வாதாடினார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், “வருமானம் தொடர்பான அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும்,சம்பாதிக்கத் தெரிந்தவர்களுக்கு அதற்கு வரி கட்ட தோன்றவில்லையோ!”.. எனக்கூறி தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இவ்வழக்கு குறித்து நேற்று(24) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மெஸ்ஸியின் தந்தைக்கு மட்டும் சிறை தண்டனை 15 மாதங்களாக குறைக்கப்பட்டு, மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட 21 மாத சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.சிறைதண்டனையுடன் 14 கோடி ரூபாய் அபராதத்துடன் தாங்கள் ஏய்த வரிப்பணத்தையும் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts: